ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் அவர்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து காதலனை தேடி ஷியா போபால் சென்றார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு போபால் சென்ற அப்பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. சமீர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தது. காதலனுடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தவருக்கு காதலன் ஏற்கனவே திருமணமானவன் என்று தெரிந்ததும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து சமீர் வீட்டில் ஷியா இருந்தார்.

ஷியாவும், சமீர் மனைவியும் ஒரே வீட்டில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர். ஷியாவிடம் சமீர் பல உண்மைகளை மறைத்திருந்தார்.

சமீர் மனைவியும் ஷியாவும் வீட்டில் போட்ட சண்டையால் பக்கத்து வீட்டுக்காரர்களே இது குறித்து புகார் செய்யும் அளவுக்கு சென்றது. இதனால் பிரச்னை பெரிதானது. எனவே சமீர் மனைவி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஷியா சமீரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

திருமணம் அல்லது பணம்

திருமணம் செய்யவில்லையெனில் ரூ.5 லட்சம் கொடுக்கும்படி ஷியா கேட்டார். அப்படி இரண்டில் ஒன்றை செய்யவில்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக காதலன் சமீரை ஷியா மிரட்டிக்கொண்டிருந்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சமீர் திணறினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது ஷியாவை சமீர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.

இதையடுத்து உடலை மறைக்க தனது குடும்பத்தினரின் உதவியை சமீர் கோரினார். சமீர் தாயார், சகோதரன், சகோதரி ஆகியோர் ஷியா உடலை மறைக்க சமீருக்கு உதவி செய்தனர். ஷியா உடலை இரும்பு பெட்டி ஒன்றில் அடைத்து அதனை இரவில் எடுத்து சென்று அருகில் இருந்த செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு வந்துவிட்டனர்.

எப்படியோ பிரச்னை முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் செப்டிக் டேங்க் அருகில் விளையாடி சிறுவர்கள் அங்கிருந்து ஏதோ கெட்ட வாசனை வருவதை அறிந்து இது குறித்து அங்கு வந்தவர்களிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்தவர்கள் செப்டிங் டேங்கை பார்த்தபோது அதில் ஒரு இரும்பு பெட்டி மிதந்து கொண்டிருந்தது. உடனே இது குறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே அடையாளம் காணமுடியாத அளவுக்கு அழுகிய நிலையில் ஷியா உடல் இருந்தது. ஆனாலும் அவரது உடம்பில் இருந்த டாட்டூ மூலம் அவரது அடையாளத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து சமீர் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் கூறுகையில், ”ஆரம்பக்கட்ட விசாரணையில் நான்கு நாட்களுக்கு முன்பு இக்கொலை நடந்திருக்கவேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

விபரீதத்தில் முடிந்த 4வது திருமண முயற்சி

கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அப்பெண்ணின் காதலன் சமீர் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறோம். கொலையை மறைக்க உதவிய சமீர் தாயார், சகோதரன், சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார். கொலை செய்யப்பட்ட பெண் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் இருந்தபோது ஏற்கனவே 3 முறை திருமணம் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நான்காவதாக சமீரை திருமணம் செய்யலாம் என்று நினைத்து வந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.