Exclusive `பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை ரகசியமாக சந்தித்தது இதனால்தான்.!’ – உடைத்துப் பேசும் கோபண்ணா

`அதிக சீட், ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக அரசியல் களத்தை அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை முழுவீச்சில் எதிர்க்க வேண்டிய காங்கிரஸ், மாறாக தன் நிலையை தக்க வைக்க திமுக-வுடன் போராடிக்கொண்டிருக்கிறது.

கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்து வராது என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெளிவாகச் சொல்லிவிட்ட நிலையில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடருமா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் தேசிய முரசு இதழின் ஆசிரியருமான கோபண்ணா அவர்களை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

“காங்கிரஸ் – திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறதே?”

“இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய பிரச்னை. பிப்ரவரி 22 ஆம் தேதி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதாக திமுக அறிவித்திருக்கிறது. அதன் பிறகு, இந்தப் பிரச்சனை பேசி முடிக்கப்படும். அப்போதும் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை என்றால் தலைவர் ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏதோ ஒரு வகையில பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.

ஏனென்றால், எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக-வுக்கு எதிராக மதசார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. தேச நலன் சார்ந்த இந்தக் கூட்டணி காலத்தின் கட்டாயம்.

மாநில அளவில திமுக தலைமையில் ஆட்சி இருக்கிறது. நாளை பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, தேசிய அளவில் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மதசார்பற்ற ஒரு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதை நோக்கமாகக் கொண்டுதான் இந்தக் கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

ராகுல் காந்தி, ஸ்டாலின்

“காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை, தமிழக நிர்வாகிகளை பலமுறை டெல்லிக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும், இந்தப் பிரச்னை ஓயவில்லையே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்து, தனித்தனியாக கருத்துக்களைக் கேட்டிருக்கிறது தேசிய தலைமை. அதில் அனைவருமே திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் கருத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆட்சியில் பங்கு அதிக இடங்கள் என்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. ஆனால், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று திமுக தலைமை சொல்லிவிட்டார்கள். ஏனென்றால், 1967-லில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தொடர்ந்து கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திக்கிறது. 

கூட்டணி அமைகும்போதே, அவர்கள் தனிப்பெரும்பான்மை பெறுகிற அளவுக்கான தொகுதிகளை முடிவு செய்துதான் போட்டியிடுகிறார்கள். ஆகையால், கூட்டணி ஆட்சி என்பது அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காதபோதுதான் ஏற்படும். அப்படியான சூழலில்தான் கூட்டணி ஆட்சி வரும் என்ற எண்ணத்தில்தான் முதலமைச்சர், `கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு சரி வராது’ என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார். கூட்டணி என்பது திமுக-வுடன்தான் என்பது முடிவாகிவிட்டது. ஆனால், அந்தக் கூட்டணி எந்த அடிப்படையிலான கூட்டணி என்பதுதான் இப்போது முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம். இது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்.’’  

“திமுக-வுடன்தான் கூட்டணி என்பதில் மாற்றம் இல்லை என்றால் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் பொதுவெளியில் தொடர்ந்து பொதுவெளியில் கருத்துக்களை பகிர்வது ஏன்?’’

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆலந்தூர் பாரதியும் அதை வலியுறுத்தியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில ஒரு அதீத ஜனநாயகம் இருக்கிறது. ஆகையால், சில பேர் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கிறார்கள். அந்த உரிமை காங்கிரஸ் கட்சியில் இருக்கிறது. அது சில நேரங்கள் வரம்பு மீறியும் போகிறது. அப்படியான கருத்து தெரிவிக்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. அது வந்து இந்த கூட்டணியை வந்து ஒரு பாதிக்கிற நிலைக்கு வந்திருக்கிறது அது விரைவில் அதற்கு ஒரு முடிவு கட்டப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

“யார் வரம்பு மீறி கருத்து தெரிவிக்கிறார்கள். யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறீர்கள்?”

“மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சியின் நலன் கருதிதான் பேசுகிறார். அவர் உரிமையோடு சில விஷயங்களை சொல்லுகிறார். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதை பெரிய தவறாக நாம் சொல்ல முடியாது. அது இருந்தால்தான் காங்கிரஸ் வளரும் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியில் வலுவாக இருக்கிறது. 58 ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சியில் இல்லை என்றால் அந்தக் கட்சி மக்களோடு தொடர்பில்லாமல் போய்விடுகிறது. அதற்காக அந்த கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் மாணிக்கம் தாகூர் பேசுகிறார்.

ஆனால், பிரவீன் சக்கரவர்த்தி திமுக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கருத்து கூறுகிறார். கூட்டணியை முறித்து தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். அதனால்தான் அவர் விஜய்யை ரகசியமாக பார்த்தார், தொடர்ந்து அதை மையமாக வைத்து கருத்து கூறுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களில் தலையிடுதற்கு பிரவீன் சக்கரவர்த்திக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஆல் இந்தியா ப்ரொஃபஷனல் காங்கிரஸில் பொறுப்பில் இருக்கும் அவர், அந்தப் பணியை செய்யாமல், தமிழ்நாட்டிற்கு வந்து அடிக்கடி வந்து, ஊடகங்களில் பேட்டி கொடுப்பதற்கு இவர் யார்?  பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது ஒரு பகை இருக்கிறது. அந்தப் பகையை தீர்த்துக்கொள்ள இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதுதொடர்பாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூலம் மேலிடத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.”

“பிரவீன் சக்கரவர்த்திக்கு திமுக மீது தனிப்பட்ட பகை என்கிறீர்கள். ஆனால், அவரோ `குறிப்பிட்ட நாற்பது ஐம்பது பேர் தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியை நடத்த முடியாது. கட்சியை வளர்க்க வேண்டும்’ என்கிறாரே?”

“தமிழ்நாடு காங்கிரஸ் விவகாரங்களில் பிரவீன் சக்கரவர்த்தி சொல்கிற கருத்துக்கள் யாருமே ஏற்கக் கூடியது அல்ல. தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை மக்களவையில் 10 உறுப்பினர்கள் இருக்கிறோம். சட்டசபையில் 25 பேர் போட்டியிட்டு 18 வெற்றிபெற்றுள்ளோம். பிரவீன் சக்கரவர்த்தி சொல்வதைக் கேட்டால், இருப்பதும் போய்விடும். எதுவுமே இல்லாத ஒரு அவல நிலைக்கு காங்கிரஸ் செல்ல வேண்டிய ஒரு சூழலைதான் பிரிவின் சக்கரவர்த்தி ஏற்படுத்த முனைகிறார்.

அவர் சொல்வது தோல்விக்கான கூட்டணி. வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத ஒரு கூட்டணியக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார் அவர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற முடியாமல் தடுக்க வேண்டும் என்றால் திமுக- காங்கிரஸ் கூட்டணி அவசியம். 

தமிழகத்தில் பாஜக கால் பதிப்பதை தவெக கூட்டணி மூலம் தடுக்க முடியாது. . ஏனென்றால், பாஜக-வை எதிர்த்து சேலம் கூட்டத்தில் கூட ஒரே ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. அவர் எதிர்ப்பது திமுக-வை மாட்டும்தான். வேறு யாரையும் நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அரசியல் எதிரி கொள்கை எதிரி என்று சொன்னவர் கொள்கை எதிரியை விட்டுட்டார். ஏனென்றால், அவருக்கு கொள்கையே கிடையாது. அரசியல் எதிரியை எதிர்த்துதான் கருத்து கூறி இருக்கிறார். பாஜகவை எதிர்க்க அவருக்கு தயக்கம். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை இருக்கிறது.

ஜனநாயகன் படப் பிரச்சனை இருக்கிறது. இவ்வளவு பாதிப்புக்கு உள்ளான நிலையில் கூட, அவர் பாஜகவை எதிர்ப்பதற்கு எந்த நிலையிலும் தயாராக இல்லை. அப்படிப்பட்டவரை நம்பி எப்படி கூட்டணி வைக்க முடியும்?  பாஜக எதிர்ப்பை முதன்மையான நோக்கமாக கொண்டு, நாள்தோறும் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரிமை குரலுக்காக போராடுகிறார். ராகுல் காந்தி எந்த பாஜகவை எதிர்த்து போராடுகிறாரோ அந்த பாஜகவை எதிர்த்து கருத்து கூற துணிவற்ற விஜய்யை காங்கிரஸ் கட்சியும் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரிப்பார்கள் என்று சொல்லுவதை என்னால் கற்பனையில கூட நினைத்து பார்க்க முடியவில்லை”

“திமுகவின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், மீண்டும் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும்தான் எதிர்வினையாற்றுகிறார்கள். இவ்வளவு பிரச்னைகளுக்கும் மத்தியில் ராகுல் காந்தி அமைதி காக்கிறாரே?’’

“திமுக – காங்கிரஸ் கூட்டணி எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர்தான். இவர்கள் யாரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யட்டும், திமுக தலைமையோடு பேசட்டும்.  இந்தக் கூட்டணியில் விரிசலோ முறிவோ ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்தக் கூட்டணிக்கு தேசிய அளவிலான நிர்பந்தம் இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்.’’

“நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால், களத்தில் பிரச்சனை வந்து எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸுக்கு பூத் கமிட்டி அமைக்ககூட ஆள் இல்லை என்கிறார் திமுக எம்எல்ஏ தளபதி, அமைச்சர் ராஜ கண்ணப்பன் காங்கிரஸ் வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் என்கிறார்?

“இரு தரப்பிலுமே கருத்து கூறுகிறார்கள். எதிர்வினை ஆற்றுகிறார்கள். அது ஊடகங்களில் வெளிவருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள்.  இப்படி தொடர்ந்து நடக்கிறது. இதற்கு விரைவில் ஒரு முடிவு கட்டப்படும். ஒரு சில நாட்கள்ல எல்லாம் சரியாகிவிடும். கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இதெல்லாம் பழைய கதையாகி எல்லாம் ஒதுக்கப்படும்”

முழு பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.