ஆந்திராவில் பில் கேட்ஸ்: `சுகாதாரம் முதல் AI தொழில்நுட்பம் வரை' – ஆலோசனை செய்த சந்திரபாபு நாயுடு!

மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவரான பில் கேட்ஸ் ஆந்திரப் பிரதேசத்திற்கு வருகை தந்தார். கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்த அவரை, ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள மாநிலச் செயலகத்திற்கு வருகை தந்த அவருக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் மாநிலச் செயலகத்தில், துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் அமைச்சரவை சகாக்களைப் பில் கேட்ஸிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்து வைத்தார்.

சந்திரபாபு நாயுடு - பில்கேட்ஸ்
சந்திரபாபு நாயுடு – பில்கேட்ஸ்

இந்தச் சந்திப்பின் போது, ஆந்திர அரசின் பல்வேறு நிர்வாக முயற்சிகளில் கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, சித்தூர் மாவட்டம் குப்பத்தில் தற்போது நடைபெற்று வரும் சுகாதாரத் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, டிஜிட்டல் கல்வி முறைகளை மேம்படுத்துவது, நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆந்திர அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் ‘ரியல் டைம் கவர்னன்ஸ் சிஸ்டம்’ (RTGS) மையத்தைப் பில் கேட்ஸ் பார்வையிட்டார். அங்கு அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், “ஸ்வர்ண ஆந்திரா 2047” என்ற தொலைநோக்குப் பார்வை குறித்தும், மருத்துவத் துறையில் டிஜிட்டல் மயமாக்கலைக் கொண்டுவரும் ‘சஞ்சீவானி’ திட்டம் குறித்தும் முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்துரைத்தார்.

பில்கேட்ஸ் - சந்திரபாபு நாயுடு
பில்கேட்ஸ் – சந்திரபாபு நாயுடு

செயலகக் கூட்டத்திற்குப் பிறகு, அமராவதி அருகே உள்ள உண்டாவல்லி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணைக்குப் பில் கேட்ஸ் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விவசாயத்தில் ட்ரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏற்கனவே ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு இரண்டு முறை வந்துள்ள பில் கேட்ஸ், சந்திரபாபு நாயுடுவின் அழைப்பை ஏற்று தற்போது மூன்றாவது முறையாக ஆந்திரா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.