டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியனாக இந்திய அணி விளையாடி வருகிறது. இம்முறையும் இந்தியா கோப்பையை வென்று தொடரை தக்கவைக்கும் என அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இந்திய அணியின் பலம் தான் காரணம். பேட்டிங்கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் என வரிசைகட்டி அதிரடி வீரர்கள் உள்ளனர். மறுபக்கம் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் என பல்வாய்ந்தவர்கள் உள்ளனர்.
Add Zee News as a Preferred Source
சொதப்பிய அபிஷேக் சர்மா
அதிலும் குறிப்பாக அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா மிகச் சிறப்பாக விளையாடுவார் என்றும் அவரே இந்த டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடிப்பார் என்றும் முன்னாள் வீரர்கள் பலராலும் கணிக்கப்பட்டது. ஆனால், அபிஷேக் சர்மா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் கடுமையாக சொதப்பி இருக்கிறார். இந்திய அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் அபிஷேக் சர்மா அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடினார். இதில் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ரவி சாஸ்திரி கருத்து
அபிஷேக் சர்மாவின் இந்த மோசமான விளையாட்டுக்கு அவரது மோசமான உடல் நல பிரச்சனையே காரணமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்துள்ளது. அதன் காரணமாகவே அவர் நமீபியா போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான் போட்டியிலும் அவர் முழுமையாக குணமடையாமலேயே விளையாடியதாக தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அபிஷேக் சர்மாவின் இந்த மோசமான விளையாட்டு குறித்து முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பேசி இருக்கிறார்.
சிறிது நேரம் களத்தில் நிற்க வேண்டும்
இது தொடர்பாக அவர் பேசியதாவது, அபிஷேக் சர்மா தற்போது தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். அவர் பழைய ரிதத்தில் இல்லை. ஆனால் அவரது பழைய ஃபார்மை பெற அவர் சிறிது நேரம் பொருமையுடன் களத்தில் நின்றாலே போதுமானது. அதாவது போட்டி மற்றும் மைதான பிட்ச்சின் சூழல் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவர் ஓரளவு ரிதத்தை பிடித்த பின்னர் அவர் எதிர்கொண்ட டாட் பால்களை பவுண்டரிகளாக மாற்றிக்கொண்டால் போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியா – நெதர்லாந்து போட்டி: அபிஷேக் சர்மா விளையாடுவாரா?
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (பிப்ரவரி 18) புதன்கிழமை மாலை அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வி உள்ளது. கூடியவரையில், அபிஷேக் சர்மாவுக்கு இப்போட்டியில் ஓய்வளித்துவிட்டு அவரை சூப்பர் 8 சுற்றுக்கு அழைத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிஷேக் சர்மா இதுவரை இந்தியாவுக்காக 36 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 8 அரை சதங்கள் உட்பட 1267 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல் (அக்சர் படேல்), வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji