தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யும் கவுதம் கம்பீர்? புதிய ஆபர்!

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இருந்து வருகிறார். இந்திய அணி 2024 டி20 உலக கோப்பையை வென்ற பிறகு புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றார். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலக கோப்பை வரை அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது அணிக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கவுதம் கம்பீருக்கு ஒரே நேரத்தில் மூன்று முக்கிய பதவிகளை வழங்கவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான் அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அணியின் புதிய முதலீட்டாளர்களில் ஒருவர் கவுதம் கம்பீரை அணுகி அவருக்கு முதன்மை செயல் அதிகாரி, ஆலோசகர் மற்றும் பங்குதாரர் போன்ற முக்கிய பொறுப்புகளை வழங்குகிறோம் என்று உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Add Zee News as a Preferred Source

ராஜஸ்தான் அணியில் மாற்றங்கள்!

கடந்த சில சீசன்களாக தோல்வியை சந்தித்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அணியின் உரிமையாளர்கள் குழுவிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அணியின் முக்கிய பங்குகளை புதிய முதலீட்டாளர் ஒருவர் வாங்கியுள்ளார். அவர் அணியின் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களையும் செய்து வருகிறார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்த கவுதம் கம்பீர் பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். அதன் மூலம் தான் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வாய்ப்பும் கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் அவரை ஐபிஎல் தொடருக்கு கொண்டு வர ராஜஸ்தான் அணி திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

பிசிசிஐ விதிமுறை 

ராஜஸ்தான் ராயல்ஸ்ன் இந்த சலுகை கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், கம்பீரால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் பிசிசிஐயின் விதிகளின்படி, இந்திய அணியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஒரே நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும், ஐபிஎல் அணியில் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது, அப்படி அவர் ஐபிஎல்லில் பணிபுரிய வேண்டும் என்றால், பிசிசிஐயில் உள்ள பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும். கவுதம் கம்பீருக்கு 2027 ஆம் ஆண்டு வரை பிசிசிஐயில் பொறுப்பு உள்ளது. எனவே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சலுகையை ஏற்க வேண்டும் என்றால், இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

கம்பீரின் முடிவு என்ன 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பல்வேறு சலுகைகளை வழங்கினாலும், கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று கூறப்படுகிறது. காரணம் அவருக்கு ஐபிஎல் தொடரை விட இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது தான் கூடுதல் மரியாதை. அவர் தனது பதவி காலத்தை முடித்த பிறகு வேண்டுமானால் ஐபிஎல்லில் பணிபுரிவார் என்றும், தன்னுடைய பதவி காலம் முடியும் முன்பு அவர் அதனை ராஜினாமா செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் ஆலோசகருக்கு அணியின் பங்கு உரிமை தருவேன் என்று கூறி இருப்பது இதே முதல் முறையாகும்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.