நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நிகழ மறுத்த அற்புதம் என்று சொற்றொடர் நிறைய இலக்கிய புத்தகங்களில் வரும். காந்தா படம் பார்த்தபோது எனக்கு அதுதான் தோன்றியது.

ஒரு கதையாக அந்த படம் மிகவும் அற்புதமாக யோசிக்கப்பட்டிருந்தது. தன்னை விட பெரிதாக வளரும்  சிஷ்யனின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத குரு. அதை சுய முயற்சியால் அவன் கற்றுக் கொண்டு கலையை வெளிப்படுத்துவதை அவமதிப்பதன் மூலம் காட்டிக்கொள்கிறார். “நான் பார்த்து வளர்ந்தவன் நீ… உனக்கென்ன புதுசா தெரியும்… என் நிழலிலேயே நீ இருக்க வேண்டும்…” என்ற ஆணின் அகங்காரம் தொனிக்கும் பாத்திரம்.

'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ
‘காந்தா’ பட காட்சி

சிஷ்யனோ கைதட்டுகளுக்காக ஏங்குபவன். கலை என்பது சாமானியனின் அங்கீகாரத்தில் உள்ளது என்று நினைப்பவன். மரபிற்கும் புதிய முயற்சிகளுக்கும் உள்ள போராட்டமாகவே இவர்கள் இருவரின் சண்டையும் விரிவடைகிறது. இருவருக்கும் நடுவே “எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துவிடலாம்!” என்று அப்பாவியாக நம்பும் கதாநாயகி.

நம் இலக்கிய உலகில் இன்றளவும் நடக்கும் சர்ச்சைகளின் ஒரு கதை வடிவமாக இதை பார்க்கலாம். ஆனால் பிரச்சனை அதை திரைக்கதையாகவும் படமாகவும் மாற்றும்போது தான் தொடங்குகிறது. இது ஒரு வகையில் இலக்கிய கண்ணோட்டத்தில் விரியும் ஆர்ட் சினிமாவா அல்லது பொதுமக்கள் விரும்பும் பொது ஜன சினிமாவா என்று முடிவெடுக்காமல் இரண்டிலும் பயணிப்பது தான் அதன் அழுத்தத்தை குறைக்கிறது. இதை ஆர்ட் சினிமா என்று முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பகுதியே தேவையில்லை.

வேறு வகையில் இதற்கு முடிவு கொடுத்து இருக்கலாம். இல்லை இது அனைவரும் விரும்ப வேண்டிய பொதுஜன சினிமா என்று முடிவெடுத்திருந்தால் அதை சொன்ன விதத்தில் மாற்றி இருக்க வேண்டும். ஒரு துப்பாக்கி சுடப்படுவதில் ஆரம்பிக்கும் கதை விரியும்போது நேர்கோட்டில் செல்வது அதற்கு அனாவசியம்.  விசாரணையினை முன்னிறுத்தி முன்பின்பாக அதை விவரிக்கும் போது ஒரு  சுவாரஸ்யம் உருவாக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். 

'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ
‘காந்தா’ நடிகை பாக்யஶ்ரீ

அடுத்த பிரச்சனை நடிகர்கள் தேர்வு. தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள் என்றாலும் இந்த பீரியட் கதைக்கு பொருத்தமானவர்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் அழகாக இருக்கிறார். ஒப்பனை செய்தபின் 1960 களின் கதாநாயகியை போல் தோற்றமளிக்கிறார். ஆனால் தமிழ் தெரியாது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக பீட்  செய்வதை கேட்டு அவர் பேசுவது அந்தக் கதாபாத்திரத்திற்கான எந்த ஒரு அழுத்தத்தையும் உருவாக்காமல் குறைத்து விடுகிறது.

ஒன்று தமிழ் தெரிந்த நாயகிகளை தேர்வு செய்திருக்கலாம். அல்லது இன்னும் தமிழில் பேச பயிற்சி அளித்திருக்கலாம். கதாநாயகன் துல்கர் சல்மானிடமும் இதே பிரச்சனை. பேச்சு மொழி தமிழில் பேசும்போது அவரால் அவரின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடிகிறது ஆனால் தூய தமிழ் அவருக்கு வரவில்லை. யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கு ஏன் தூய தமிழில் டயலாக் வேண்டும்?

1950ல் பராசக்திக்கு பிறகே பேச்சுத் தமிழ் படங்களில் அதிகமாக இருந்தது. இன்றைய தேதியில் அந்த காலம் போல் தூய தமிழில் பேசி பயிற்சி எடுத்தவர்கள் நடிகர்களிலும் இல்லை, பின்னணி பேசுபவர்களும் இல்லை. அவர்கள் பேசும்போது ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவே மிகவும் எரிச்சலூட்டுகிறது. 

காந்தா விமர்சனம் | Kaantha Review
காந்தா விமர்சனம் | Kaantha Review

அடுத்ததாக குரு கதாபாத்திரம் சமுத்திரக்கனி அவரின் ஸ்டாக் எக்ஸ்பிரஷன் மூலமே அதன் அழுத்தத்தை நமக்கு கடத்தலாம் என்று நினைத்திருக்கிறார். இது போன்றது ஒரு பாதித்திரம் தான் ஆடுகளம் படத்தில் வரும் வேட்டைக்காரன் கதாபாத்திரம் ஆனால் அதில் நடித்திருக்கும் ஜெயபாலன் மீது வரும் கோபம், பரிதாபம் இவரின் பாத்திரத்தின் மீது வர மறுக்கிறது. காரணம் பாதி படத்திற்கு மேல் வெறும் முகச்சுழிப்பும், வெறித்த பார்வையும் மட்டுமே நமக்கு அளிக்கிறார். 

உண்மையில் இந்த படம் முடிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. படத்தின் கதாபாத்திரங்களையும் அவற்றின் முடிவையோ நினைத்தில்லை. எவ்வளவு அழகான கதை, எவ்வளவு அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்கள், எத்தனை வகையில் விரியக்கூடிய முரண்கள் –  அனைத்தும் ஒரு குழப்பமான திரைக்கதையினால் வேண்டிய வரவேற்பை பெறாமல் போய்விட்டதே என்றுதான்.

தேர்தல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.