வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
5/12/2025 அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார்.
தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார்.

1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார்.
மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. பால்டிமோரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். இதற்கென அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான உதரத்துட்காட்டி (லேப்ராஸ்கோபிக்) அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற மருத்துவர் லட்சுமிபாய் பிரிட்டனில் பயிற்சி பெற்றார்.
இந்தியாவில் இந்த பயிற்சி பெற்ற முதல் மருத்துவர் இவர்தான், இதற்காக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மருத்துவர்.லட்சுமிபாய் கௌரவிக்கப்பட்டார். இந்த விரிவான கல்வி அவருக்கு உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்கியது, உலகளாவிய கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்.லட்சுமிபாய் தன்னுடைய மருத்துவ நிபுணத்துவத்தை ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தினார்.

1950 ஆம் ஆண்டு ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்றார்.
பல ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.லட்சுமிபாய் தான் பணிபுரிந்த காலத்தில் எண்ணற்ற தாய்மார்கள் பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவச மருத்துவ பராமரிப்பை வழங்கிய இந்த மருத்துவர் தனது நூறாவது வயதில் பெர்ஹாம்பூர் பாபா நகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார்.
பிரசவம் பார்க்கும் மருத்துவராக மட்டுமல்லாமல் நம்பிக்கை அளிக்கும் தாயாக பலரின் அச்சத்தையும் உயிர் பயத்தையும் போக்கியுள்ளார். வறுமை, பயம், மூடநம்பிக்கை, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கிடையே வாழ்ந்த ஒடிசா மாநிலத்தின் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற மீனவ குடும்பப் பெண் 1962 ஆம் ஆண்டு ஒரு புயல் சூழ்ந்த மாலையில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தை பிறப்பு தாமதமான நிலையில் அச்சமும் பதற்றமும் கலந்து “கடவுள்கள் எங்களை சபித்துவிட்டார்கள்” என்று மூச்சிரைக்க கூறினாள்.

அந்த நெருக்கடியான நேரத்தில், மருத்துவர்.லட்சுமிபாய் “சீதா, நீ புயலை விட வலிமையானவள்; என்னுடன் சேர்ந்து சுவாசி” போன்ற மென்மையான தைரியம் அளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய அணுகுமுறையால் சீதாவின் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை உருவாக்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தபோது, சீதா “அம்மா நீங்கள் எங்களை காப்பாற்றுவது மட்டுமல்ல என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்ப வைத்தீர்கள்” என உணர்வுபூர்வமாக நன்றி கூறினாள்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தங்களை குணப்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த சக்தி இருப்பதாகவும் அதனை வெளிக்கொணர்வதும் மகப்பேறு மருத்துவத்தின் ஒரு அங்கம் என்றும் பல்வேறு இடங்களில் கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாயின் வார்த்தைகளுக்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த உதாரணம்.
இது நன்கொடை அல்ல, என் மரணத்திற்கு பின்பும் என் மருத்துவப் பணி தொடர்கிறது என்பதன் அடையாளம் என்று கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய் இந்த நிதி பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உலகு போற்றும் கொடையுடன் கூடுதலாக இளம் பெண்களிடையே புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டங்களுக்காக பெர்ஹாம்பூர் மகப்பேறியல், மகளிர் மருத்துவ சங்கத்திற்கு மருத்துவர்.லட்சுமி பாய் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
உங்கள் சேமிப்பு முழுவதையும் ஏன் மருத்துவ துறைக்கு கொடுத்து விட்டீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, “நான் சம்பாதித்த அனைத்தும் மக்களிடமிருந்து வந்தது. அது அவர்களிடம், குறிப்பாக வெளியில் சொல்ல இயலாமல் அமைதியாக துன்பப்படும் பெண்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும்” என்று கூறினார்.
திருமணம் செய்துகொள்ளாமல், அரசுப் பணியில் தன்னை அர்ப்பணித்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய், தான் சிகிச்சையளித்த ஆயிரக்கணக்கான நோயாளிகளையும், தான் வழிகாட்டிய மருத்துவ மாணவமாணவிகளையும் தனது உண்மையான, உயிருள்ள சொத்துக்களாகவும், தனது குடும்பமாகவும் கருதுகிறார்.

ஆண்டுதோறும் புற்றுநோயால் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் மருத்துவ வசதி கள் குறைவாக இருப்பதால் இந்த நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் 50%-க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான நோயறிதல், போதிய மருத்துவ வளங்கள் இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கொடையினை மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கினார்.
இந்த கொடைக்கான நிதியை காசோலையாக உறையில் வைத்து மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் “இது தொண்டு அல்ல உறையில் அடைக்கப்பட்ட புரட்சி” என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மருத்துவர் லட்சுமிபாய் “உறைக்குள் இருக்கும் இந்தப் புரட்சியின் பலன் இருளில் வலியை பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லாத பெண்களை சென்றடைய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
