Big Bash: சென்னையில் நடக்கப்போகும் பிக் பாஷ்? ஆஸ்திரேலியாவின் புதிய திட்டம்! பிசிசிஐயின் முடிவு என்ன?

Big Bash League In Chennai Chepauk: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் எவ்வளவு பிரபலமோ அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக உள்ளது. தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்களை தவிர்த்து மற்ற நாடு வீரர்கள் பலரும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகின்றனர். பெரிய ரசிகர்கள் பலத்தை கொண்டுள்ள வீரர்கள் விளையாடுவதால், இத்தொடர் பிரபலமானதாகவே இருந்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

பிக் பாஷ் லீக் தொடரை இந்தியாவில் நடத்த திட்டம் 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் லீக் தொடரை மேலும் ஒரு படி உயர கொண்டு செல்ல ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பிக் பாஷ் லீக் தொடரை சென்னை சேப்பாக்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் நடத்தியதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் பேச்சுவார்த்தை 

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரிகள் சில சமீபத்தில் சென்னை வந்ததாகவும் அவர்கள் தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் இந்த ஆண்டு பிக் பாஷ் தொடரின் தொடக்க போட்டியை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் பேசி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட்  வாரியம் சென்னை சேப்பாக்கத்தில் பிக் பாஷ் தொடரின் போட்டியை நடத்த ஆர்வம் காட்டி உள்ளது. அவர்களின் விருப்பத்தை நாங்கள் கேட்டறிந்தோம். ஆனால் இது தொடர்பான இறுதி முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் (பிசிசிஐ) எடுக்க வேண்டும். அவர்கள் அனுமதி வழங்கும் பட்சமே நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என கூறி உள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் ஏன்? 

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிக் பாஷ் தொடரை அடுத்தகட்டமாக இங்கு நகர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மற்ற மாநில தலைநகரங்களை விட சென்னையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த ஆர்வம் காட்டி இருக்கின்றனர். நடப்பு ஆண்டின் தொடரை இங்கு நடத்தி வெற்றி பெறும் பட்சத்தில் அவர்கள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்த முன்வருவார்கள் என தெரிகிறது.  

பிசிசிஐ சமதம் தெரிவிக்குமா? 

இதுவரை பெரிதாக எந்த வெளிநாட்டு லீக் தொடரும் இந்தியாவில் நடைபெற்றதில்லை. இந்த சூழலில், பிக் பாஷ் தொடருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் இந்த கோரிக்கையை பிசிசிஐ பரிசீலனை செய்து சமதம் தெரிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.