டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் விநோத சாதனை! ஒரு ஓவரில் 35 ரன்கள் – சச்சின், கோலி கூட அடிக்கவில்லை

Jasprit Bumrah : டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமிருக்காது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட் சாலப்பொருத்தம். 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், ஒவ்வொரு ரன்னுக்கும் பேட்ஸ்மேன்கள் போராட வேண்டியிருக்கும். சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் கூட ஆட முடியாத பிரம்மாதமான இன்னிங்ஸை பவுலர்கள் ஆடிவிடுவார்கள். அப்படி ஒரு ஆட்டத்தை ஆடி உலகின் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் செய்ய முடியாத சாதனையை செய்து வைத்திருக்கிறார். அது என்னவென்றால் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார். அது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

1. ஜஸ்பிரித் பும்ரா விஸ்வரூபம்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் யார் என்று கேட்டால், பலரும் சச்சின், லாரா அல்லது கோலி போன்ற ஜாம்பவான்களின் பெயரைக் கூறுவார்கள். ஆனால், இந்த இமாலய சாதனையைத் தன்வசம் வைத்திருப்பவர் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம். 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இது நிகழ்ந்தது. 

இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய அந்த ஓவரில், பும்ரா விஸ்வரூபம் எடுத்தார். அந்த ஓவரில் பும்ரா அடித்தது 29 ரன்கள், ஆனால் நோ-பால் மற்றும் வைடு என மொத்தம் 35 ரன்கள் அந்த ஓவரில் கசிந்தன. ஒரு பந்துவீச்சாளராக இருந்து கொண்டு, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளரை நிலைகுலையச் செய்த பும்ராவின் இந்தச் சாதனை கிரிக்கெட் உலகின் ஒரு ‘அதிசயம்’ என்றே சொல்லலாம்.

2. பிரையன் லாரா

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, மைதானத்தில் நின்றாலே பந்துவீச்சாளர்களுக்கு நடுக்கம் ஏற்படும். 2003-04 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் வீசிய ஓவரை லாரா ஒரு கை பார்த்தார். அந்த ஓவரில் லாரா தொடர்ச்சியாக 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 28 ரன்கள் அந்த ஒரே ஓவரில் எடுக்கப்பட்டது. பும்ரா இந்தச் சாதனையை முறியடிக்கும் வரை, நீண்ட காலம் லாராவே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

3. ஜார்ஜ் பெய்லி:

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி, தனது விசித்திரமான பேட்டிங் ஸ்டைலுக்காக அறியப்பட்டவர். 2013-14 ஆஷஸ் தொடரின் போது, பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஓவரில் பெய்லி புகுந்து விளையாடினார். உலகின் மிகச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளரான ஆண்டர்சனை எதிர்கொண்ட பெய்லி, அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். அந்த ஓவரில் மொத்தம் 28 ரன்கள் எடுக்கப்பட்டது. ஒரு டெஸ்ட் போட்டியில், அதுவும் ஆஷஸ் போன்ற போட்டி நிறைந்த தொடரில் ஆண்டர்சன் போன்ற வீரரை இப்படி விளாசுவது என்பது சாதாரண காரியம் அல்ல.

4. கேசவ் மகாராஜ்: 

தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ், பேட்டிங்கிலும் அவ்வப்போது தனது திறமையை வெளிப்படுத்துபவர். 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போர்ட் எலிசபெத் டெஸ்டில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச வந்தார். ஜோ ரூட் ஒரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் என்றாலும், அவர் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். ஆனால், கேசவ் மகாராஜ் அன்று வேறொரு மனநிலையில் இருந்தார். ரூட்டின் ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களைக் குவித்தார். இதில் கடைசி பந்து நான்கு ரன்களுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளராக அறியப்படும் மகாராஜ், பேட்டிங்கில் இவ்வளவு ரன்களைக் குவித்தது இங்கிலாந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

5. ஷாஹித் அப்ரிடி: 

பாகிஸ்தான் அணியின் அதிரடி மன்னன் ஷாஹித் அப்ரிடிக்கு டெஸ்ட் போட்டிக்கும் டி20-க்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. 2005-ஆம் ஆண்டு லாகூரில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீசிய ஓவரில் அப்ரிடி வானவேடிக்கை காட்டினார். அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்ஸர்களாக மாற்றினார் அப்ரிடி. 6, 6, 6, 6 எனத் தொடங்கிய அந்த ஓவரில் அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மற்றும் 1 ரன் எடுக்கப்பட்டது. மொத்தம் 27 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்தார் அப்ரிடி.

இந்த 5 பிளேயர்களே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள், இந்திய பிளேயர் பும்ரா இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.