ICC T20 World Cup 2026, Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தயாராகி வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது, கடந்த இரண்டு தொடர்களில் இன்னும் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை.
Add Zee News as a Preferred Source
தவறுகளை திருத்துமா இந்தியா?
சூப்பர் 8 சுற்றில் பிப். 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் தென்னாப்பிரிக்கா அணியுடனும், பிப். 26ஆம் தேதி சென்னை நகரில் ஜிம்பாப்வே அணியுடனும், மார்ச் 1ஆம் தேதி கொல்கத்தா நகரில் மேற்கு இந்திய தீவுகள் அணியுடனும் இந்திய அணி மோத இருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியில் தோற்றாலும் நாக்அவுட் சுற்றுக்கு போவது சிரமமாகிவிடும். எனவே, குரூப் சுற்றில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சூப்பர் 8 சுற்றில சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு வீக்னஸ்
அபிஷேக் சர்மாவின் தொடர் சொதப்பல், திலக் வர்மாவின் திணறல், பந்துவீச்சில் இருக்கும் சிறு சிறு தவறுகள் ஆகியவற்றில் இருந்து இந்திய அணி விடுபட வேண்டும். அதேநேரத்தில், இந்திய அணியின் பேட்டர்களுக்கு சுழற்பந்துவீச்சு தான் கடந்த 4 போட்டிகளிலும் பிரச்னையை கொடுத்துள்ளது. அமெரிக்க அணியுடனான போட்டியில் ஹர்மீத் சிங் – மோஷின் ஆகியோர் இந்திய அணியை திணறடித்தனர். ஒரு படி மேலே சென்று, நமீபியா கேப்டன் எராஸ்மஸ் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்டை தூக்கினார். பாகிஸ்தான் போட்டியில் உஸ்மான் தாரிக், சயிம் அயூப் ஆகியோர் இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர். நெதர்லாந்து அணியில் ஆர்யன் தத் இந்திய அணியின் பலவீனத்தை வெளிச்சமிட்டுக் காட்டினார்.
தென்னாப்பிரிக்காவின் ஸ்பின்னர்கள்
எனவே, நாளை மறுநாள் (பிப். 22) இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதன் சுழற்பந்துவீச்சு பலவீனத்தை பயன்டுத்தி விக்கெட்டை கைப்பற்ற தென்னாப்பிரிக்காவும் திட்டமிடும். ஏற்கெனவே, தென்னாப்பிரிக்காவில் ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகாராஜ் ஆகியோர் உள்ளனர். இரண்டு பேரும் இடதுகை ஆர்த்தடாக்ஸ் சுழற்பந்துவீச்சாளர்கள். கார்பின் பாஷிற்கு பதில் லிண்டே விளையாட வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்காவில் தற்போது மணிக்கட்டு ஸ்பின்னரே இல்லை எனலாம்.
இடது கை பேட்டர் vs ஆப் ஸ்பின்னர்
அதேநேரத்தில், இந்திய அணியில் முதல் 8 பேட்டர்களில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே வலது கை பேட்டர்கள். அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் தூபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல்/வாஷிங்டன் சுந்தர் என 6 இடது பேட்டர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஆப்-ஸ்பின்னர் vs இடது கை பேட்டர்களுக்கு இடையிலான மேட்ச்-அப்பை பயன்படுத்தி அட்டாக் செய்ய தென்னாப்பிரிக்கா பிளான் போடும். பாகிஸ்தான் போட்டியில் அந்த அணியின் கேப்டனும், ஆப் ஸ்பின்னருமான ஆப் சல்மான் அலி ஆகா முதல் ஓவரிலேயே பந்துவீசி அபிஷேக் விக்கெட்டை வீழ்த்தி ஷாக் கொடுத்தாரோ, அதே வியூகத்தை தென்னாப்பிரிக்காவும் திட்டமிடும் எனலாம்.
மார்க்ரம் பந்துவீச்சு பயிற்சி
அதற்கேற்ப, இன்று வலைப்பயிற்சியின் போது தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் இடது கை பேட்டருக்கு ஆப் ஸ்பின் பந்துவீச்சில் பயிற்சி எடுத்து வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊடகவியலாளர் சஹில் மல்ஹோத்ரா இன்று மதியம் அவரது X பக்கத்தில், “தென்னாப்பிரிக்கா வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எய்டன் மார்க்ரம் பந்துவீசி வருகிறார், எனக்கு ஆச்சர்யமாக இல்லை. பயிற்சியாளர் ஒருவர் இடது கையில் பேட்டிங் செய்கிறார், மார்க்ரம் அவருக்கு பந்துவீசி வருகிறார். பார்க்க ஆல்பி மார்கல் போல் இருக்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் மார்க்ரம் இதுவரை 2 ஓவர்களே வீசி உள்ளார், ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் அதிக ஓவர்களை வீசுவது நிச்சயம்” என பதிவிட்டிருந்தார்.
South Africa nets are underway and not surprised to see Aiden Markram rolling his arm over. He is bowling to left-hander, member of the coaching staff but not sure who. Looks like Albie Morkel. He has bowled only two overs in WC but will bowl a lot more vs India for sure.
— Sahil Malhotra (@Sahil_Malhotra1) February 20, 2026
என்ன செய்யப்போகிறார் சூர்யகுமார்?
மார்க்ரம் மட்டுமின்றி மற்றொரு ஆப் ஸ்பின்னரான டிரிஸ்டன் ஸ்டபஸ் தென்னாப்பிரிக்கா அணியில் உள்ளார், அவரும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஓரிரு ஓவர்களை வீசலாம். இதன்மூலம், இந்தியாவின் அதிரடிக்கு பிரேக் போட தென்னாப்பிரிக்கா வியூகம் வகுக்கும். இது இந்திய அணிக்கும் நிச்சயம் தெரியும், ஆனால் அதில் இருந்து தப்பிக்க கம்பீர் – சூர்யகுமார் படை இதுவரை எதிர் வியூகத்தை அமைத்தது போல் தெரியவில்லை. அதில் இருந்து தப்பிச் செல்வது எப்படி என்பதையே அவர்கள் திட்டமிடுகிறார்கள், ஆப் ஸ்பின்னரை அடித்து துவைக்கப்போவது யார் என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
மேலும் படிக்க | IND vs SA: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர் 8! இந்திய அணியில் 2 மாற்றம்?
மேலும் படிக்க | 2028 டி20 உலகக் கோப்பை: இப்போதே தகுதிபெற்ற 12 அணிகள்… என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க | மிரட்டும் ஜிம்பாப்வே… மண்ணை கவ்விய இலங்கை – உற்றுநோக்கும் இந்திய அணி
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More