மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அறுபது வயதில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று முதல்வரானார். நடிகர் திலகம் சிவாஜி, அறுபது வயதுக்குப் பிறகு சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்போது 75 வயது. இப்போதும் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்துகொண்டு மிரட்டுகிறார்.
மறுபக்கம், உலக நாயகன் கமல் தனித்தன்மை இழக்காமல் தனி ரூட்டில் கலக்குகிறார். தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா, ஏன் இந்திய சினிமாவின் இரு துருவங்கள் இணையும் திரைப்படம் குறித்து தான் இப்போது எங்கும் பேச்சு. அந்தப்படத்தின் அதிரடி ப்ரமோ நாளை வெளிவர இருக்கிறது.

கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த ப்ரமோவை, இதுவரை எதிலும் இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறாராம் இயக்குநர் நெல்சன்.
நாளை 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களின் இதயங்கள் இறக்கைகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டன. அது சரி, அதென்ன 12:07 மணிக்கு வெளியீடு?
ரஜினி பிறந்த 12-ஆம் தேதியையும், கமல் பிறந்த 7ஆம் தேதியையும் சென்டிமென்டாகச் சேர்த்திருக்கின்றனர். ஒரு நிமிடத்துக்குள் ஓடும் ப்ரமோவில் முதலில் நெல்சனும் அனிருத்தும் பேசுகிறார்கள். அடுத்து ரஜினியின் டயலாக், அதன்பிறகு வாய்ஸ் ஓவரில் கமல் வருகிறார்.

வழக்கமாக ரஜினி படங்கள் பிற மொழிகளிலும் வெளியாகும். அப்போது தெலுங்கு மொழியில் பாடகர் மனோ பின்னணிக் குரல் கொடுப்பார். அதுபோல இந்தி மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பது வழக்கம். இந்த ப்ரமோவிலும் தமிழில் ரஜினி வசனம் பேசிவிட்டுச் சென்றுவிட்டார். தெலுங்கு, இந்திக்கு பிறர் குரல் கொடுத்திருந்தனர். இடையில் ரஜினி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மறுநாள் திடீரென்று டப்பிங் தியேட்டரில் இருந்த நெல்சனுக்கு, “இப்போ நான் அங்க வர்றேன்” என்று போன் செய்திருக்கிறார்.
என்னவோ ஏதோ என்று பதட்டத்தில் இருந்த நெல்சனின் தோள்மேல் கை போட்டு, கூலாக்கியிருக்கிறார். அதன்பிறகு, 21ஆம் தேதி 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவில், தானே சொந்தக் குரலில் தெலுங்கு, இந்தி மொழிகளில் பேசி அசத்தியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
ரஜினி, கமல் போட்டிக்குப் பிறகு விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், ராமராஜன், ஒரு பக்கம் டி. ராஜேந்தர், மறுபக்கம் கே. பாக்யராஜ், ராஜ்கிரண், பிரசாந்த், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விஜய சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன், கவின் என்று ஏகப்பட்ட தலைமுறைகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டனர். கடந்த 50 ஆண்டுகளைத் தாண்டியும் ரஜினி, கமல் படங்களுக்கான மாஸ் என்பது மரண மாஸ்தான் என்று நிரூபித்துக்காட்ட இருவரும் தயாராகிவிட்டனர்.