ICC T20 World Cup 2026, Team India: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நேற்றுடன் (பிப். 20) நிறைவடைந்துவிட்டன. குரூப் சுற்றோடு 12 அணிகள் வெளியேறிவிட்டன, எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று கொழும்புவில் மோத உள்ளன. நாளை இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. நாளை மதியம் 3 மணிக்கு இலங்கை – இங்கிலாந்து அணிகள் கண்டியில் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் அகமதாபாத் நகரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோல்வியே காணாத இந்தியா
இந்திய அணி தொடர்ச்சியாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 13 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, உள்நாடு – வெளிநாடுகளில் ஒரு டி20ஐ தொடரை கூட இந்திய அணி இழக்கவில்லை, அத்தனையையும் வென்றிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை நாடுகளிலும் தொடரை வென்றிருக்கிறது. ஆசிய கோப்பை தொடரையும் வென்றிருக்கிறது. இந்த வெற்றிப் பயணத்தை தொடர சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி நிச்சயம் முனைப்பு காட்டும்.
இந்திய அணி அரையிறுதி போகாது…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியிருக்கிறது. சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகளை இந்திய அணி சந்திக்க இருக்கிறது. இந்தச் சூழலில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆமிர் கருத்து தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகளே முதல் பிரிவில் இருந்து அரையிறுதிக்குச் செல்லும் என்றும் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
கவுண்டர் அட்டாக் தேவை
இந்திய அணியின் பேட்டிங்கை பொருத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சற்று திணறி வருகிறது. எனவே, அதை முறியடிக்கும் விதமாக ஸ்வீப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட், இறங்கி வந்து நேராக அடிப்பது என சுழற்பந்துவீச்சுக்கு எதிரான கவுண்டர் அட்டாக் ஷாட்களை இந்திய பேட்டர்கள் விளையாட வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சிவம் தூபே உள்ளிட்டோர் சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்வதில் பெயர் பெற்றவர்கள். அவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மிடில் ஓவர்களில் நிதானம் காட்டுவது கடைசிக் கட்டத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதுவும் அபிஷேக் சர்மாவிடம் இருந்து பவர்பிளேவில் அதிரடியான தொடக்கம் இதுவரை கிடைக்கவில்லை, இஷான் கிஷன் மட்டுமே டாப் ஆர்டரில் ஆறுதல் அளிக்கிறார்.
கனவு நிறைவேறுமா…?
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள் மூன்று அணிகளுடனும் இரவு போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதேநேரத்தில் மூன்று அணிகளும் உலகத்தரத்திலான ஸ்பின்னர்கள் உள்ளனர். இவர்களிடம் நிதானம் காட்டாமல் அதிரடி காட்டினால் மட்டுமே இந்திய அணியின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை டி20 உலகக் கோப்பை வெல்லும் கனவு நிறைவேறும். இல்லையெனில் முகமது ஆமிர் கூறியதை போல் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறி, கனவு கலைந்துவிடும்.
மேலும் படிக்க | “இது முடிவு அல்ல.. தொடக்கம்”! விவாகரத்தை அறிவித்த CSK வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
மேலும் படிக்க | இந்தியா – தென்னாபிரிக்கா சூப்பர் 8 போட்டி! முக்கிய வீரருக்கு காயம்?
மேலும் படிக்க | IND vs SA: வாஷிங்டன் vs அக்சர்… இந்திய அணியின் பிளேயிங் 11ல் யாருக்கு வாய்ப்பு?
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More