Is Sanju Samson Replace Abhishek Sharma In Super 8 Matches: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது சூப்பர் 8 சுற்றை எட்டி உள்ளது. இந்த சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது.
Add Zee News as a Preferred Source
நாளை IND Vs SA போட்டி
இதில் நடப்பு சாம்பியனாக திகழும் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (பிப்ரவரி 22) ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தின் நரேந்திரன் மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்பாக, இந்திய அணியின் ரசிகர்களுக்கு ஒரு கவலை ஏற்பட்டுள்ளது.
அதாவது, இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்பவர் அபிஷேக் சர்மா. அவர் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். இந்த சூழலில், அவர் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் ஒரு ரன்னை கூட அடிக்கவில்லை. அவர் லீக் சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடினார். இதில் அனைத்திலும் அவர் டக் அவுட்டே ஆனார். தொடரின் தொடக்க போட்டி முடிந்த பின்னர் அவர் வயிற்று வலி காரணமாக அவதிபட்டு வருவதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
அபிஷேக் சர்மா 3 போட்டிகளிலும் டக் அவுட்
அதன்பிறகு அவர் ஓய்வில் இருந்த நிலையில், நமீபியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விளையாடாமல், பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் அவர் ரன்களை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து நெதர்லாந்து போட்டியிலாவது ரன்களை சேர்பார் என நினைத்தபோது, அப்போட்டியிலும் டக் அவுட் ஆனார். இப்படி 3 போட்டிகளிலும் ஒரு ரன்னை கூட சேர்காமல் அபிஷேக் சர்மா வெளியேறியதால், அவருக்கு சூப்பர் 8 சுற்றில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அபிஷேக் சர்மா சூப்பர் 8ல் விளையாடுவாரா
அதேசமயம், அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக, சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலரது மத்தியில் எழுந்துள்ளன. அபிஷேக் சர்மாவின் சறுக்கல் லீக் போட்டிகளில் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், சூப்பர் 8 சுற்றில் பெரிய அணிகளுடன் விளையாடும்போது அது பிரச்சனையாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவரை பிளேயிங் 11ல் இருந்து நீக்கும் எண்ணம் துளியும் இல்லை என உதவி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறி உள்ளார்.
இந்திய அணி திட்டவட்டம்
நாளை (பிப்ரவரி 22) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதவுள்ள நிலையில், உதவி பயிற்சியாளர் மோர்னே மோர்கல் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய அணிக்குள் எந்த விவாதமும் இல்லை. அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார். வரும் போட்டிகளில் நிச்சயம் ரன்களை குவிப்பார். அவருக்கு முழு ஆதரவை கொடுப்போம் என மோர்னே மோர்கல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை
அபிஷேக் சர்மா மோசமாக விளையாடியதால், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோர்னே மோர்கலின் இந்த பதிலால் அவருக்கு இப்போதைக்கு பிளேயிங் 11ல் இடம் கிடையாது என்பது தெளிவாகி உள்ளது.
About the Author
R Balaji