IPL 2026 Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 8ஆம் தேதியுடன் இத்தொடர் நிறைவடைகிறது. அடுத்து மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கிவிடும். இதுவும் மே மாத இறுதிவரை தொடரும். எனவே, பிப்ரவரியில் ஆரம்பித்த டி20 திருவிழா சுமார் நான்கு மாதங்கள் வரை நீள்கிறது.
Add Zee News as a Preferred Source
ஐபிஎல் தொடர் இதுவரை 18 சீசன் நிறைவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 1 முறை கோப்பையை வென்றுள்ளன.
நடப்பு சாம்பியன் மேல் எதிர்பார்ப்பு
நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர் ரஜத் பட்டிதர் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்தாண்டு கோப்பையை வென்றது. தற்போது மகளிர் பிரீமியர் லீக் தொடரிலும் ஆர்சிபி மகளிர் அணி 2வது முறையாக கோப்பையை வென்றிருப்பதால், ஆர்சிபி ஆடவர் அணி மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், தோனியின் கடைசி சீசன் என்பதாலும் வரும் 2026 சீசன் மீது பலத்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
தேர்தல் காரணமாக பிரச்னை
ஆனால், எப்போது ஐபிஎல் தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகாமல் உள்ளது. வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதியும், அட்டவணையும் வெளியாகிவிடும். ஆனால், இம்முறை இன்னும் வெளியிடாமல் இருப்பது பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. பிசிசிஐ ஐபிஎல் அட்டவணையை வெளியிடுவதில் பெரும் பிரச்னையாக இருப்பது வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல்தான்.
அதுவும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஐபிஎல் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள காவலர்கள் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடுவார்கள் என்பதால் ஐபிஎல் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காமல் போகலாம். எனவே, ஐபிஎல் அட்டவணை வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இரண்டு கட்டமாக அட்டவணை…
பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா இதுகுறித்து சமீபத்தில் பேசியபோது, ஐபிஎல் போட்டிகள் நடத்தும் மைதானங்களை இறுதிசெய்வதற்கு முன், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு ஐபிஎல் நிர்வாகம் காத்திருக்கிறது என்றார். மொத்தமாக பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஐபிஎல் அட்டவணை இருக்கட்டங்களாக வெளியாகவும் வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தலின்போதும் ஐபிஎல் நிர்வாகம் இதையே செய்யும். தொடக்க கட்ட போட்டிகளை திட்டமிட்டு, அதன்பின் அரசு தரப்பு முன்னேற்றங்களை பார்த்துவிட்டு மற்ற போட்டிகளுக்கான இடங்களை நிர்வாகம் உறுதிசெய்யும்.
மைதானமும் பிரச்னை…
தேர்தல் மட்டுமின்றி, மற்றொரு பிரச்னையையும் பிசிசிஐ சந்தித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் ஒரு சில மைதானங்களில் தற்போது போட்டி நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது. ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது சில கட்டுமான குறைபாடுகள், தீயணைப்பு பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அங்கு போட்டிகளை விளையாட தயக்கம் காட்டுவதாகவும், எனவே தற்காலிகமாக ஹோம் போட்டிகளை புனே எம்சிஏ மைதானத்தில் விளையாடவும் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே சிக்கல் நிலவுவதாகவும் கூறப்பட்டது.
எப்போது வெளியாகும்?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி விளையாடுவதிலும் சிக்கல் நீடித்த நிலையில், இந்த மாதம் கர்நாடக அரசிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்துவிட்டது. இதனால், ஆர்சிபி சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதில் சிக்கல் இல்லை. தேர்தல் மற்றும் மைதான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு மார்ச் முதல் வாரத்தில் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் முதல்கட்ட போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இன்றைய போட்டியில் அபிஷேக் சர்மா இல்லை? மாற்று வீரர் இவரா?
மேலும் படிக்க | NZ vs PAK: ஒரு பால் கூட வீசவில்லை; மழையால் சூப்பர் 8 போட்டி ரத்து… பாயிண்ட்ஸ் எப்படி?
மேலும் படிக்க | IPL 2026: 10 அணிகளின் இம்பாக்ட் வீரர் யார்…? ஆப்ஷன்கள் இதோ!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More