தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் – பதவியேற்ற புது நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகளுக்கான (2026 – 2029 ஆண்டிற்கான) தேர்தல், சென்னை அண்ணாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் (நேற்று பிப் 22ம் தேதி) நடந்தது. முரளி ராமசாமி தலைமையில் இம்முறை இராம நாராயணன் அணி, ஜி.கே.எம். தமிழ்குமரன் சார்பில் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. இதில் நலன் காக்கும் அணியின் தலைவராகப் போட்டியிட்ட தமிழ்குமரன் அணி வெற்றி பெற்றுள்ளது.

நலம் காக்கும் அணியினர்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதுதான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான சங்கம் உதயமானது. அதற்கு முன்னர் சேம்பர் ஆகத்தான் இருந்தது. தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிலிருந்து இப்போது மு.க.ஸ்டாலின் வரை சங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடந்தது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராக கோவை செழியன் இருந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் கே.ஆர்.ஜி., இப்ராஹிம் ராவுத்தர், கே.ஏ.முரளிதரன், டி.ஜி.தியாகராஜன், இராமநாராயணன் மூன்று முறை பதவி வகித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், கலைப்புலி தாணு, விஷால், முரளி என்.ராமசாமி எனப் பலரும் தலைவர் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். 

விஷால்

இம்முறை தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் ஜி.கே.எம். தமிழ்குமரன் 788 வாக்குகள் பெற்று, 527 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதேபோல பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் 715 வாக்குகளும் பெற்றுள்ளார். சுயேச்சை வேட்பாளராக செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஃபைவ் ஸ்டார் கதிரேசன் 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக… தலைவராக தமிழ்குமரன், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், கமலக்கண்ணன், செயலாளர்களாக கதிரேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் இணைச் செயலாளராக சுஜாதா விஜயகுமாரும், பொருளாளராக என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருடன் செயற்குழு உறுப்பினர்களும் அண்ணாசாலையில் உள்ள ஃபிலிம் சேம்பரில் பதவி ஏற்றுக் கொண்டனர். இன்று பொறுப்பேற்றுக் கொண்ட புது நிர்வாக அணியினர், ‘தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்ததை இனி வரும் காலங்களில் நிறைவேற்றுவோம்’ எனத் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக சங்கத்தின் நிதிப் பற்றாக்குறையைப் போக்க, நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தி நிதியை சேகரிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தனர். நிர்வாகிகள் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.

வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.