'பாலு ஜுவல்லர்ஸ்' தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! – மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி

கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள்

படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப் பிந்தைய சக்ஸஸ் மீட் வரை தீயாய் வேலை செய்யும் குமார்கள் பலர் தமிழ் சினிமவில் இருக்கிறார்கள். அவர்களில் ரஜினி, கமல் தொடங்கி நேற்று அறிமுகமான புது நடிகர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் என்றால் `நிகில் முருகன்’. தற்போது நடிகர் அவதாரமும் எடுத்து விட்ட நிகில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்து விட்டார்.

சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் நடிக்கும் `லீடர்’ இவரது 600 வது படம். படத்தின் அறிவிப்பு சில தினங்களூக்கு முன் வெளியான சூழலில் நிகிலிடம் பேசினோம்.

ஜேடி-ஜெர்ரி

யாரிப்பு அமிதாப் – என்ட்ரியே டாப்!

”தாத்தா டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியின் முதல் ஆசிரியராக இருந்த தாக்கம்னு நினைக்கிறேன், பத்திரிகையாளர் ஆகணும்கிறதுதான் என்னுடைய ஆரம்பகால ஆசை. மைசூர் பல்கலைக் கழகத்துல ஜர்னலிசத்துல டிப்ளமோ படிச்சேன். முடிச்சதும் தமிழ்மகன் மூலமா தினமணி, வீரபத்ரன் மூலமா ‘பொம்மை’ முதலான பத்திரிகைகள்ல சினிமா செய்திகள் எழுதிட்டிருந்தேன்.

பிறகு பாக்யராஜ் சார் பி.ஆர்.ஓ. சினி நியூஸ் செல்வம் தொடர்பு கிடைக்க, அவர் மூலமா ‘பாக்யா’ பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தேன். செல்வம் ஒர்க் பண்ணின படங்களில் அவருக்கு அசிஸ்டென்டாவும் ஒர்க் பண்ணினேன். காரணம் அப்பவே பி.ஆர். ஒர்க் எனக்கு பிடிக்கத் தொடங்கிடுச்சு. அடிப்படையிலேயே எல்லாருடனும் ஈசியா மிங்கிள் ஆகற என் குணம் இந்த விஷயத்துல பெரிய ப்ளஸ்ஸா இருந்திச்சு.

கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், ‘பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க‌, நான் என்ன பதில் சொல்லட்டும்’னுதான் கேட்டேன்.

பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும். ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன்.

இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது. ‘சொல்றேன்’னு சொன்னவர், ‘பாலு ஜுவல்லர்ஸ்’ நகைக்கடையின் பி.ஆர். ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார். அங்க ஜேடி – ஜெர்ரி அறிமுகம் கிடைச்சது.

அவங்க இயக்கிய ‘உல்லாசம்’தான் சினிமா மக்கள் தொடர்பாளரா என்னுடைய முதல் படம். அமிதாப் சார் தயாரிப்பு.

நேருக்கு நேர்

விவேக் சார் வாங்கித் தந்த அஜித் பட வாய்ப்பு!

அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே ‘நேருக்கு நேர்’, ‘தேவதை’, ‘காதல் மன்னன்”னு மேலும் சில படங்கள் கமிட் ஆச்சு. ‘காதல் மன்னன்’ மறைந்த விவேக் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு.

ஒரே சமயத்துல அமிதாப் சார் தயாரிப்புல, மணிரத்னம், நாசர், சரண் சார் இயக்கத்துல விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் அதுவும் ஃபீல்டுல நுழையும் போதே ஒர்க் பண்ணினதுக்கு காரணம் என்னுடைய அணுகுமுறை. விவேக் சார் இதை எங்கிட்டயே சொன்னார்” என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை வைத்தோம்.

இன்னைக்கு தனித்துத் தெரியற இடத்துல இருக்கீங்க. தனியா தெரிய ஆரம்பிச்சது எப்படி?

”தனித்து தெரியணும்னா தனியா எதையாச்சும் பண்ணினாலே போதும். பத்திரிகைகளூக்கு போட்டோக்கள் கொடுக்கிறப்ப புகைப்பட விபத்தை பேனாவால் எழுதிக் கொடுத்திட்டிருந்தாங்க அப்போ. எதுக்கு திரும்ப திரும்ப எழுதணும்? ஏ4 சீட்ல நாலு தடவை எழுதி ஜெராக்ஸ் போட்டுக் கொடுத்தேன். பிறகு படங்களை சிடி யில் ஏத்திக் கொடுக்கிறது, அடுத்து மெயில், இப்ப ஏ ஐ வரைக்கும் வந்திடுச்சு.

'Leader' Movie Team
‘Leader’ Movie Team

டெக்னாலஜியை அப்டேட் செய்யறதுலயும் ரொம்பவே உஷாரா இருந்தேன். அதேபோல ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையில் முரண் இருக்கானு செக் செய்யறதை ரொம்ப முக்கியமா பண்ணுவேன். ஏன்னா எந்தப் பிரச்னையுமில்லாதவங்க எந்தக் கான்ட்ரவர்சியும் எழுதப் போறதில்ல. பிரச்னை இருக்கிறவங்களைச் ச‌ந்திக்க வச்சு அதைச் சரி செய்துட்டா அங்க சிக்கல் இல்லை.

சினிமா ஆளூமைகளிடமிருந்து கத்துக்கிட்ட விஷயங்கள்..

கே. பாலச்சந்தர் சார் அவருடைய மேஜையில் ஒரு வாசகம் வச்சிருப்பார். ‘எதுக்காவும் யார்கிட்டயும் எக்ஸ்க்யூஸ் கேக்கறதை நான் விரும்பறதில்ல’ங்கிறதுதான் அது. அவர்கிட்ட இருந்து இந்தப் பழக்கத்தை எடுத்துகிட்டேன். வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒரு இஞ்ச்சாவது அடுத்த அடிக்கான முயற்சியை செய்யணும்கிறதை ஷங்கர் சார்கிட்ட இருந்து கத்துகிட்டேன்.

rajini kamal
rajini kamal

ஒரு விஷயத்தை முடியாதுனு நினைக்காம, கடைசி வரைக்கும் ட்ரை பண்ணனும்னு கமல் சாரை பாத்து தெரிஞ்சுகிட்டேன்.

ரஜினி சார்கிட்ட இருக்கிற அப்சர்வேஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எந்தவொரு விஷயத்தையும் நிதானமா பல கோணங்களில் பார்ப்பார் அவர்.” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.