தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான ‘ஆரம்பம்’ படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் ‘டபுள் ஆக்குபன்ஸி’ என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம்.
“நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன்.
இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம்.

இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன்” என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா.
வாழ்த்துகள் அவந்திகா!