கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை குறைத்து விடுவார்களோ என்கிற பதட்டத்தில் இருக்கும் வைகோ ஒரு துண்டு சீட்டோடு அறிவாலயம் வர, இன்னொரு பக்கம் அறிவாலயத்தில் காங்கிரஸாரை சந்திக்க வாய்ப்பிருந்து அதை தவிர்த்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காங்கிரஸின் குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது திமுக. கிரிஷ் சோடங்கர் நேற்றிரவு 10 மணிக்கு மேல் சென்னை வந்து சேர்ந்திருந்தார். இன்று ஒரே நாளில் 7 கட்சிகளுடன் கூட்டணி பேச முடிவெடுத்திருந்தது திமுக.
காங்கிரஸூக்குதான் முதல் ஸ்லாட். காலை 10:30 – 11 க்குள்ளாக அறிவாலயம் வருமாறு காங்கிரஸூக்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. சரியாக 11:05 க்கு காங்கிரஸ் குழுவினுடைய கார் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. ஸ்டாலின் அறைக்கு எதிரே உள்ள மீட்டிங் ஹாலில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உட்பட திமுகவின் தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்தது. 11:15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 12:20 வரை நீண்டது. காங்கிரஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே தனியரசு, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன், தமீமுன் அன்சாரி, வைகோ போன்றோரும் அறிவாலயம் வந்து சேர்ந்தனர்.

முதல்வர் அறிவாலயம் வருவது திட்டத்திலேயே இல்லை. ஆனால், திடீரென மதியம் 12:15 மணியளவில் அறிவாலயம் பரபரப்பானது. வைகோ கேட்டுக் கொண்டதால் மதியம் 12:30 க்கு அப்பாய்ண்மெண்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் கான்வாய்க்காக போலீசார் ரூட்டை க்ளியர் செய்தனர். சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழு உள்ளே இருக்கும் போது முதல்வர் வருகை தந்தால் இருதரப்பும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. நாளை முதல்வரின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகளை கூட பரிமாறிக் கொள்வார்கள் என கூடியிருந்த செய்தியாளர்களும் அலர்ட் ஆகினர். ஆனால், மதியம் 12:25 க்கு பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு செல்வப்பெருந்தகை, சோடங்கர் உட்பட்ட காங்கிரஸ் குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அத்தனை பேர் முகத்திலும் இறுக்கம். செல்வப்பெருந்தகை மட்டுமே பேசினார்.
‘எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது’ என்றார். சோடங்கரை பேசவே விடவில்லை. ‘பவர் ஷேரிங்’ பற்றி பேசினீர்களா என்கிற அணுகுண்டு கேள்வியை பத்திரிகையாளர்கள் வீச பதறிப் போன செல்வப்பெருந்தகை சோடங்கரை மடக்கி அணைத்து அப்படியே வெளியில் நகர்த்தி சென்றுவிட்டார். காங்கிரஸினரின் கார் கிளம்பிய அடுத்த பத்தே நிமிடங்களில் முதல்வரின் கான்வாய் அறிவாலயத்துக்குள் நுழைந்தது. வைகோ, வேல்முருகன் போன்ற மற்ற கூட்டணி கட்சியினரை சந்தித்த முதல்வர் காங்கிரஸ் குழுவை மட்டும் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்திருந்தார். இருதரப்புக்கும் இடையேயான இழுபறியில் இன்னும் ஒரு சுமுகமான புள்ளி எட்டப்படவில்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

‘தேமுதிக, மக்கள் நீதி மய்யம், SDPI, கொங்கு இளைஞர் பேரவை என நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துவிட்டன. நாங்களே கடந்த முறையை விட குறைவான சீட்களில்தான் நிற்கப்போகிறோம். நீங்களும் பார்த்து முடிவெடுங்கள். மத்தியில் பாஜக வலுவாக இருக்கிறது. இந்த சமயத்தில் நம்முடைய கூட்டணி எண்ணிக்கைகளை கடந்து தொடர்வது முக்கியம். பார்த்து முடிவெடுங்கள்’ என திமுகவின் பேச்சுவார்த்தைக் குழு கறாராக கூறியதால்தான் ‘இவ்வளவு அலப்பறை கொடுத்தும் திமுக மசியவில்லையே…’ என்கிற மனவருத்தத்தில் அப்செட்டாக அறிவாலயத்தை விட்டு கிளம்பியிருக்கிறது காங்கிரஸ் குழு. பரஸ்பரமாக எந்த நல்ல முடிவும் எட்டப்படாததால்தான் முதல்வரும் காங்கிரஸை சந்திப்பதை தவிர்த்ததாக கிசுகிசுக்கின்றனர்.
காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.
தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, ‘காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்’ என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர்.

அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, ‘அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு’ என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார்.

புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.