பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (17) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம்  தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.

இதற்கமைய பெப்ரவரி 22ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளன.

  • பெப்ரவரி 23 எதிர்க்கட்சி கொண்டுவரும் யோசனைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதம்
  • பெப்ரவரி 25 மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த அனுதாபப் பிரரேரணை

பெப்ரவரி 23ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் யோசனைக்கு அமைய சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பெப்ரவரி 24ஆம் திகதி  முற்பகல் 11.00 மணி முதல் பிற்பக்ல 4.30 மணி வரை தாவர, விலங்கினப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமூலம், மரங்களை வெட்டி வீழ்த்துதல் (கட்டுப்படுத்தல்) சட்டத்தின் கீழான கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

அதேநேரம், பெப்ரவரி 25ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பான அனுதாபப் பிரேரணை இடம்பெறும். இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ. ஆனந்த ரத்னாயக (பொலனறுவை மாவட்டம்), கௌரவ ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்க்ஷ (குருநாகல் மாவட்டம்), கௌரவ. சோமவீர சந்திரசிறி (தேசியப் பட்டியல்), கௌரவ. பி.பி.திஸாநாயக (அநுராதபுர மாவட்டம்), கௌரவ. எச்.ஆர். மித்திரபால (கேகாலை மாவட்டம்) ஆகியோர் குறித்த அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும். இதில் ஒவ்வொரு உறுப்பினரின் அனுதாபப் பிரேரணைக்கு தலா 75 நிமிடம் ஒதுக்கப்படவுள்ளது.  அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்விகள், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின்  போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.

பெப்ரவரி 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை வாய்மூலவிடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பெப்ரவரி 22 மற்றும் 24ஆம் திகதிகளில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,

பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)

இலங்கை பாராளுமன்றம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.