சென்னை: “கல்வியில் மற்ற மாநிலங்களோடு தமிழகத்தைப் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும், தமிழகம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்று. அப்படி முன்னேறியிருக்கிற மாநிலத்திடம் புதிய தேசிய கல்விக் கொள்கையை புகுத்த நினைப்பதே தவறு“ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோட்டூர்புரத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் இரண்டாவது நாளாக இன்று (ஏப்.5) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கல்வியில் மற்ற மாநிலங்களோடு தமிழகத்தைப் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும், தமிழகம் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்று. அப்படி முன்னேறியிருக்கிற மாநிலத்திடம் புதிய தேசிய கல்விக் கொள்கையை புகுத்த நினைப்பதே தவறு.
இன்றைய அறிவியல் என்பது நாளை தேவையற்றதாக கூட இருக்கலாம். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்கள் அடங்கிய கலவையான ஒரு குழுவை தமிழக முதல்வர் அமைத்துள்ளார். நிச்சயமாக எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. மற்ற மாநிலங்களைவிட சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கும்.
டெல்லி துணை முதல்வரை நாங்கள் அழைத்திருக்கிறோம். அவர் மூன்றாவது வாரத்தில் இங்கு வரவிருக்கிறார். கட்டமைப்பை பொருத்தவரை 1,100 பள்ளிகள்தான் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் ஏறக்குறைய 38,000 பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த 38,000 பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான், ரூ.7 ஆயிரம் கோடியை அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார்.
உள்கட்டமைப்பு அவசியம்தான். டெல்லியில் மிக சிறப்பாக இருந்தது. 1,100 பள்ளிக்கூடங்களில் 25 பள்ளிகளில் நீச்சல் குளமே அவர்கள் வைத்துள்ளனர். எனவே, தமிழகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அப்போதுதான் மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வரும். எந்தப் பள்ளிக்குச் சென்றாலும், பள்ளியின் கழிவறைகளை பார்வையிட்ட பின்னர்தான், வகுப்பறைகளை ஆய்வு செய்து வருகிறேன். கழிவறை தானே என்று அதை பார்க்கக்கூடாது, அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். கழிவறையை பார்த்துதான் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்போம் என்று பல பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக கவனம் செலுத்த நாங்கள் விரும்புகிறோம்.
1,100 பள்ளிகளுக்கு டெல்லி அரசு 60 மில்லியன் ஒதுக்குகிறார்கள் என்பது பெரிய விசயம். அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களுமே இந்த மாடல் பள்ளிகளை பஞ்சாப்பில் தொடங்குவது பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அவர்களிடம் தமிழகத்திற்கு வந்து பள்ளிகளை பார்வையிட வேண்டுமென்று கூறியிருக்கிறோம். மூன்றாவது வாரம் வருவதாக தெரிவித்துள்ளனர்.
திருப்புதல் தேர்வைப் பொறுத்தவரை இரண்டு பாகமாகத்தான் வைத்திருக்கிறோம். 4 பாடங்களைக் கொண்டதுதான் முதல் திருப்புதல் தேர்வு, எஞ்சிய 3 பாடங்கள்தான் இரண்டாம் திருப்புதல் தேர்வு. இதில் எதெல்லாம் நடத்தி முடிக்கப்படவில்லையோ அதிலிருந்து கேள்விகள் கேட்கக் கூடாது என்பதுதான் நியாயமானது, அதனை நான் கவனத்தில் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.