உக்ரைனில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில், உக்ரைனின் அப்பாவி மக்களையும் ரஷ்ய ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கின்றனர் என ரஷ்யாமீது உக்ரைன் குற்றம்சாட்டிவருகிறது. ஆனால், பொதுமக்கள் மீது ரஷ்ய வீரர்கள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை எனக் கூறிவரும் ரஷ்யா, ஒரே இரவில் உக்ரைனின் 16 ராணுவத் தளங்களைத் தங்கள் படைகள் அழித்ததாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், `ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது’ என உக்ரைன் அதிபர் அவையின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டெலிகிராம் மூலம் பொதுமக்களுக்குச் செய்தி அனுப்பிய தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக், “உக்ரைனில் தற்போது இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது. எங்கள் ராணுவத்தை நம்புங்கள்… எங்களின் சக்திவாய்ந்த உக்ரைன் ராணுவத்தின் படைகள், ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்கும்” என உறுதியாகக் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான கிரெமின்னாவை ரஷ்யப் படைகள் நேற்று கைப்பற்றியதாக, உள்ளூர் அதிகாரிகள் தற்போது தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.