திருநங்கைகளாக உணரக்கூடியவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பள்ளியிலேயே கவுன்சிலிங் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிட தயார்நிலையில் உள்ளதாகவும், இந்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால், பாலியல் வன்கொடுமை தொடர்பாக உதவி எண்களுக்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும், அந்த அழைப்புகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாவும் அமைச்சர் தெரிவித்தார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, பள்ளிப் பருவத்திலேயே தாங்கள் திருநங்கை என்பதை உணரத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் தங்களின் நிலையை வீட்டிலும் சொல்லமுடியாமல், சக மாணவர்களிடமும் பகிர முடியாமல் தவிக்கிறார்கள். இதுபோன்ற சூழலில் கவுன்சிலிங் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளதாவும், இதை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு பதில் அளிக்கும்விதமாக திருநங்கைகளாக உணரக்கூடியவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பள்ளியிலே கவுன்சிலிங் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். காவல்துறை மூலம் 45 ஆயிரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாவும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலம் ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் சிறுதொழில் துவங்கிட கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், RIGHTS திட்டத்தில் பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
