மராட்டிய முதலமைச்சர் வீட்டு வாசலில் அனுமன் பக்தி பாடலை பாடப்போவதாக அறிவித்த பெண் எம்.பி.யின் வீட்டை முற்றுகையிட்டு சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மும்பை: மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டு வாசலில் அனுமன் பக்தி பாடலை பாடப்போவதாக அறிவித்த பெண் எம்.பி.யின் வீட்டை சிவசேனா கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். அமராவதி மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் சுயாட்சியாக போட்டியிட்டு வென்றவர் நவ்நீத் கௌர் ராணா. இவர் அம்பா சமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சிலப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய நவ்நீத் ராணா அனுமன் ஜெயந்தி தினத்தன்று மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கோயிலுக்கு சென்று அனுமன் சாலிசா படவில்லையென்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மும்பை கலா நகரில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அனுமன் சாலிசா எனப்படும் பக்திப்பாடல்களை பாடவுள்ளதாக நவநீத் அறிவித்திருந்தார். நவநீத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான சிவசேனா கட்சி தொண்டர்கள், எம்.பி நவ்நீத் கௌர் ராணா வீட்டினை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சிவசேனா தொண்டர்களின் முற்றுகையை அடுத்து நவ்நீத் கௌர் ராணாவையும் அவரது கணவரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவி ராணாவையும் வீட்டைவிட்டு வெளியே செல்லவிடாமல் மும்பை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. நவ்நீத் கௌர் ராணா அனுமன் பக்திப்பாடலை முதலமைச்சர் வீட்டின் வெளியே பாடுவதில் என்ன தவறு என்று கேள்வியெழுப்பினார். அதிகாலையிலேயே தனது வீட்டினை முற்றுகையிடுமாறு சிவசேனா தொண்டர்களை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தூண்டிவிட்டதாகவும் நவ்நீத் ராணா குற்றம் சாட்டினார். எத்தனை பிரச்னை வந்தாலும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்தின் வெளியே அனுமன் சாலிசா பாடலை நிச்சயம் பாடவுள்ளதாக நவ்நீத்  உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.