கேரள மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ மத போதகர் தாமஸ் பரேக்குளமூக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளியின் கிளை, கேரள மாநிலம் கொல்லத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் போதகர் தாமஸ் பரேக்குளம் (35 வயது).
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் தங்கியிருந்த 16 வயதான 4 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பின்னர் அவர் மீதான விசாரணையில் குற்றம் உறுதியானதால், இந்திய தண்டனை சட்டம் 377 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இவர் மீதான இந்த வழக்கு விசாரணை கொல்லம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்ததை அடுத்து, இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அந்த தீர்ப்பில், 3 வழக்குகளில் போதகர் தாமஸ் பரேக்குளமூக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஒரு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் என மொத்தம் 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த நான்கு வழக்குகளை சேர்த்து மொத்தம் நான்கு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.