மும்பை: என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், மேடை பேச்சின் குறுக்கே அதன் நிர்வாக இயக்குனர் பத்மஜா, ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் கேட்க, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே தனது மேஜை மீது இருந்த குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். இதனை கண்டு அரங்கத்தினர் அசந்து போயினர். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
பங்குச்சந்தை சார்ந்த பொதுத் துறை நிறுவனம் என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம். நூற்றாண்டுக்கும் மேலான துடிப்பான பங்குச்சந்தையை கொண்டிருக்கும் இந்தியா, காகித அடிப்படையிலான பங்கு வர்த்தகத்தை செய்து வந்தது. 1996ல் என்.எஸ்.டி.எல்., ஆகஸ்டில் உருவாக்கப்பட்டு அந்த சிக்கலான வர்த்தக முறை மாற்றம் காண துவங்கியது. தற்போது வெள்ளி விழா காணும் என்.எஸ்.டி.எல்., உலகின் மிகப்பெரிய பங்குகள் வைப்பு நிறுவனங்களில் ஒன்று.
இந்நிலையில் சனிக்கிழமை (மே 07) மும்பையில் என்.எஸ்.டி.எல்., வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாணவர்களுக்கான முதலீட்டாளர் விழிப்புணர்வு திட்டத்தையும், என்.எஸ்.டி.எல்லின் 25 ஆண்டு கால பயணத்தை நினைவுகூரும் அஞ்சல் தலையையும் வெளியிட்டார்.

முன்னதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசியதால் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது. ஓட்டல் ஊழியரிடம் தண்ணீர் தருமாறு கேட்டார். இதனை கவனித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டிலை, கோப்பையுடன் எடுத்துச் சென்று அவருக்கு பரிமாறினார். இதனை கண்டு திக்குமுக்காடிப் போனார் பத்மஜா. நிதியமைச்சரின் இந்த அன்பான செயலுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தினரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
Advertisement