சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் இதழியல் துறை தலைவராக இருந்தவர் நடராஜன். கடந்த 2010-ம் ஆண்டு பல்கலைக்கழக அடிப்படை வசதியை மேம்படுத்தவும், ஆராய்ச்சி பயன்பாட்டுக்கும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும், மத்திய அரசின் 11-வது நிதிக்குழு ரூ.7,66,50,000 நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில் அமைக்கப்படும் சிறப்பு வகுப்புகளை கண்காணிக்கும் தலைவராக அப்போதைய இதழியல் துறைத்தலைவரான நடராஜன் நியமிக்கப்பட்டார்.

அதில் அவருக்கு, ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வகுப்பு நடத்தும்படி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் 2011-2012-ல் ஃபால்சிலிங், ஏசி, ஸ்டூடியோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியதாகக் கூறி ரூ.4,45,456 செலவு செய்ததாக நடராஜன் தெரிவித்திருக்கிறார். பின்னர் கணக்கு ஒப்படைக்கும்போது, போலியான நிறுவனங்களின் பெயரில் பில்களை வைத்திருக்கிறார். இது பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரியவந்ததையடுத்து, நடராஜன் மீது விஜிலென்ஸில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் நடராஜனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற நடராஜன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றும் எண்ணத்துடன் மோசடி செய்தல், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விஜிலென்ஸ் தற்போது வழக்கு பதிவு செய்திருக்கிறது.