அசாம் வெள்ள பாதிப்பு: கவுகாத்தி-சில்சார் இடையே அவசர விமான சேவை தொடக்கம்

கவுகாத்தி:
அசாம் கனமழை வெள்ளப் பெருக்கால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகோன், ஹோஜாய், கச்சார் மற்றும் தர்ராங் மாவட்டங்களில்  நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 
மாநிலத்தின் 29 மாவட்டங்களில் 7.12 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாகோன் மாவட்டத்தில் மட்டும் 3.36 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
கச்சார், லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் வெள்ளத்தில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால் அந்த  மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
 80 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும், 2,251 கிராமங்களும் 
தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. 234 நிவாரண முகாம்களில் 
மொத்தம் 74,705 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், கவுகாத்தி மற்றும் சில்சார் இடையே அவசர விமான சேவையை தொடங்கப்பட உள்ளதாக விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அந்த விமானத்தில் டிக்கெட் விலை ரூ.3,000 என நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக  தமது டுவிட்டர் பதிவில்  அவர் கூறியுள்ளார். அரசின் இந்த முயற்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.