சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றினை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “சென்னையில் பெருங்குடி, தேனாம்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. இதனால், மண்டல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகளில் தொய்வில்லாமல் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 93.74 சதவீதத்தினரும், 82.55 சதவீதத்தினர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 1.22 கோடி பேர் இரண்டாம் தவனை தடுப்பூசியையும் செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.