புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படவில்லை, போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு இல்லை, பற்றாக்குறையாக இருக்கிறது என்பதே மின்தட்டுப்பாடுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இது அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என அத்துறையின் அமைச்சர் தெரிவித்திருந்தார். செல்லுமிடமெல்லாம் பொதுமக்கள் மின் பிரச்னை குறித்து தெரிவிக்கின்றனர். உரிய மின்சார தொகுப்பை மத்திய அரசு கொடுக்க வேண்டும். மின் தட்டுப்பாடு ஏற்படாமல் சரி செய்ய வேண்டியதும் மாநில அரசின் கடமை.
காங்கிரஸ் என்பது வற்றாத ஜீவநதி போன்றது
ராஜ்ய சபா உறுப்பினராக வரவேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து கபில் சிபல் விலகி உள்ளார். சிலர் சேர்வதும், விலகுவதும் அவரவருடைய தனிப்பட்ட விருப்பம். அவர்களது உரிமை. ஒரு சிலர் கட்சியை விட்டு செல்வதால் காங்கிரஸ் கட்சி பலவீனம் ஆகிவிடாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி 130 ஆண்டு காலம் வரலாறு கொண்ட கட்சி. காங்கிரஸ் என்பது வற்றாத ஜீவநதி போன்றது அது ஓடிக் கொண்டுதான் இருக்கும். யார் சேர்ந்தாலும் யார் விலகினாலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பு வராது.

ஆராய்ச்சியாளராக தொழில்நுட்பம் தெரிந்தவராக பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். பல கட்சிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சில மாநிலங்களில் அது வெற்றி பெற்றுள்ளது. சில மாநிலங்களில் தோல்வியும் கண்டுள்ளது. அதனால் அவர் போகும் இடமெல்லாம் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது. என்னைப் பொருத்தவரை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸூ்க்கு வராதது தான் அவருக்கும் நல்லது காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கை அனைத்தும் ராகுல் காந்தி கையிலேயே உள்ளது. ராகுல் காந்தி கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்பு அவர் இந்தியா முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் பணிகளை அவர் செய்வார். நாட்டு மக்களும் கட்சித் தொண்டர்களும் ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுகின்றனர். அந்த வகையில் அவரது செயல்பாடுகள் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.
சோதனைகளை ப.சிதம்பரம் சட்டரீதியாக எதிர் கொள்வார்
தொடர்ந்து பேசியவர், “ஒரு வீட்டில் எத்தனை முறைதான் சோதனை செய்வார்கள். ஏதோ ஒரு குற்றச்சாட்டை சொல்லி வீட்டுக்குச் சென்று சோதனை செய்கின்றனர். அப்படி சோதனையில் ஈடுபட்டு இதுவரை என்ன எடுத்துள்ளனர். ஒன்றுமே எடுக்கவில்லை. ஏதோ ஒரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு சோதனை செய்து அவர்களை பாதிக்க வைப்பதற்கு வேண்டுமென்றால் இது பயன்படுமே தவிர இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு குற்றச்சாட்டும் செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலர் வீட்டில் சோதனை நடத்துவதால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமோ தேர்தல் வெற்றியோ பாதிக்காது.
இந்த சோதனைகளை ப.சிதம்பரம் சட்டரீதியாக எதிர் கொள்வார். இதுபோன்ற காங்கிரஸ் கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட கூடாது என்பதே எனது கருத்து.
என்னைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே எந்த ஒரு விரிசலோ ஓரசலோ இல்லை, கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம்தான். அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்து என்பது கிடையாது அப்படி கருத்துக்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தால் வெவ்வேறு கட்சிகளின் தேவை இருக்காது. பேரறிவாளன் விடுதலை பொறுத்தவரை திமுக அதிமுக கருத்தோ அவர் விடுதலையை மற்ற கட்சியினர் தலைவர்கள் வரவேற்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக தெரியவில்லை. திமுகவின் நிலைப்பாடு இதுதான் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். அந்த நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்தது. சட்டத்தின்படி அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் ஆனால் அது தர்மத்தின்படி சரியானது அல்ல என்பது காங்கிரஸின் கருத்து. இது திமுக-வுக்கு புதிய கருத்தல்ல, காங்கிரஸின் கருத்து இதுதான் என்பது அவர்களுக்கும் தெரியும். இதற்கிடையில் தான் பத்து வருஷம் கூட்டணியாக ஆட்சியும் நடந்தது.

திமுக ஆட்சிக்கு அதிமுக பாராட்டுப் பத்திரம் வைத்து கொடுக்கமாட்டார்கள் குற்றச்சாட்டை மட்டும்தான் வைப்பார்கள். அதிமுக எதிர்க்கட்சி என்ற முறையில் ஆளும் கட்சியை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
தேர்தல் கால வாக்குறுதிகளை சிலவற்றை நிறைவேற்றி இருக்கலாம் சிலவற்றை நிறைவேற்றாமல் இருக்கலாம். வாக்குறுதி என்பது ஐந்து ஆண்டுகளுக்கு தரப்பட்டது. ஐந்து மாதத்திற்கான வாக்குறுதி அல்ல. ஆட்சி வந்தவுடன் ஒரே ஆண்டில் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதைச் செய்யவும் முடியாது. ஏனென்றால் அதற்கான நிதி ஆதாரம் என்பது குறிப்பிட்ட அளவுதான் வருவாய் வரம்புக்கு உட்பட்டு தான் வரவு செலவு கணக்குகள் செய்ய முடியும். அதனால் சொன்ன வாக்குறுதியை ஏன் ஓராண்டில் நிறைவேற்றவில்லை என்று கேட்கமுடியாது. இன்னும் நான்காண்டுகள் உள்ளது. சிலநேரம் கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டிய சூழல் உள்ளது. திடீரென்று கொரோனா வந்தது… தேர்தல் அறிக்கையில் இரண்டாயிரம் மூவாயிரம் கோடி செலவு செய்வோம் என்றா கொடுத்தார்கள். எதிர்பாராதவிதமாக மக்களைக் காப்பாற்ற நிதி ஒதுக்க வேண்டி இருந்தது. இதனால் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கலாம்.” என்றவர், சசிகலா இவகாரம் குறித்து பேச ஆரம்புத்தார்.
“சசிகலா எதிர்பார்ப்பது போல் அதிமுக செயல்படவில்லை. அதனால் ஜனநாயக முறைப்படி அவரின் கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு ஓ.பி.எஸ் இ.பி.எஸ் தான் பதில் சொல்ல வேண்டும். சசிகலாவை அதிமுகவில் சேர்த்தாலும் சரி சேர்க்காவிட்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான். சசிகலாவின் முயற்சி வெற்றி பெறுமா என்றால் எனக்கு ஜோசியம் பார்க்க தெரியாது. ஆனால் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது என்பது நடப்பதாக தெரியவில்லை. சசிகலா மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் அவரை சேர்ப்பதாக தெரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சசிகலாவை சேர்த்துக்கொள்ள சொன்னால், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட இருவரும் பயந்துகொண்டு அவரை சேர்த்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள்தான் முடிவு செய்யும் அதிகாரத்தில் உள்ளனர். அதிமுக-வின் இரட்டை தலைமையை மோடியும், அமித் ஷாவும் தான் கொண்டுவந்துள்ளனர். அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்பாளர் என்பது பாஜகவின் திட்டம். மோடி, அமித் ஷா போட்ட திட்டத்தில் தான் இவர்கள் செயல்படுகின்றனர்” என்றார்.