இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி? – முழு விவரம் இதோ!

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. பா.ஜ.க-வும், எதிர்க்கட்சிகளும் தங்கள் சார்பில் வலுவான குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்த மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் குடியரசுத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

தேர்தல் ஆணையம் – குடியரசுத் தலைவர்

15-வது குடியரசுத் தலைவர் தேர்தல்:

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கானத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 62-ன் படி, குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும் என்பது விதி. மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் சட்டம், 1952 (President Election Act, 1952) படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை, பதவிக்காலம் முடிவதற்கு 60 நாள்களுக்கு முன்பாகவே வெளியிட வேண்டும்.

அதனடிப்படையில், வருகின்ற ஜூலை 18 அன்று குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் ஜூலை 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதன்பின்னர், தேர்தலில் வெற்றிபெற்றவர் ஜூலை 25-ம் தேதி புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்பார். இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இந்த மாதம் ஜூன் 15-ம் தேதி தொடங்கி, ஜூன் 29-ம் தேதியுடன் இறுதி நாளாக முடிவடைகிறது. மறுநாள் ஜூன் 30-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே ஆகியோர் அறிவித்திருக்கின்றனர். மேலும், மாநிலங்களவை தலைமைச் செயலர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவருக்கான தகுதி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சில அடிப்படைத் தகுதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 58 தெளிவாக வரையறுக்கிறது. அதன்படி, தேர்தலில் போட்டியிடுபவர் முதலில் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அடுத்ததாக அவர் 35 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும், அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கானத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

நாடாளுமன்றம்

குடியரசுத் தேர்தல் நடைபெறும் முறை:

குடியரசுத் தலைவர் தேர்தல் நாட்டின் தலைநகரில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் உள்ள சட்டமன்றங்களிலும் நடைபெறும். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலின் வாக்காளர்கள். ( எம்.பி-க்கள். எம்.எல்.ஏ-க்களை உள்ளடக்கிய வாக்காளர் தேர்தல் குழுவினால் (electoral college) குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க்கப்படுகிறார்) அதேசமயம் நியமன எம்.பி-க்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. அதன்படி, நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி-க்கள் 776 பேர் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேச எம்.எல்.ஏ-க்கள் 4,033 பேரையும் சேர்த்து மொத்தம் 4,809 வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றனர்.

வாக்கு மதிப்பு:

அரசமைப்பு சட்டப் பிரிவு 55-ன் படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குரிமையில் அனைத்து மாநிலங்களுக்கும் முடிந்தவரை ஒரே சீர்மை (Uniformity of Representation) இருக்க வேண்டும் என்கிறது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. குறிப்பாக, 4,033 மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பை எடுத்துக்கொண்டால், அவை ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். காரணம், எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பானது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்திய வரைபடம் –

அதாவது, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையை, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையால் வகுத்து, அதனை மீண்டும் 1000-ல் வகுத்தால் கிடைப்பதுதான் அந்த உறுப்பினரின் வாக்கு மதிப்பு.

உதாரணமாக,

“மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை / மாநிலத்தின் மொத்த சட்டமன்றத் தொகுதிகள் = விடை

விடை/1000 = இறுதி விடை”

இந்த இறுதி விடைதான் ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு மதிப்பு. இதேபோல் அந்த மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பையும் சேர்த்தால், மொத்த வாக்கு மதிப்பு கிடைத்துவிடும்.

குடியரசு தின அணிவகுப்பு

அடுத்ததாக, குறிப்பிட்ட ஒரு மாநிலத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பை, அந்த மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதுதான், நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு.

அதன்படி, தற்போதைய மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 776 பேரில் ஒருவரது வாக்கின் மதிப்பு 700. அந்தவகையில் இந்தத் தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரிக்கிறார்.

குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணம்:

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 60-ன் படி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்.

உச்ச நீதிமன்றம்

குடியரசுத் தலைவர் பதவிக்காலம்:

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என அரசியலமைப்பு சட்டப்பிரிவு 57 கூறுகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகளிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ பலன்பெறும் பதவிகளை வகிப்பவர்களாக இருப்பவர்கள் குடியரசுத் தலைவர்காக தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர்கள். அதேசமயம், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், மத்திய மாநில அமைச்சர் பதவிகளை வகிப்பவர்கள், பலன்பெறும் பதவிகளை வகிப்பவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

இந்திய ராணுவம்

குடியரசுத் தலைவருக்கான அதிகாரம்:

இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் குடியரசுத் தலைவர். நாட்டின் நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே இருக்கிறது எனக் கூறப்பட்டாலும், தானே நாட்டை நிர்வகிக்காமல் அமைச்சரவை மூலமாகத்தான் நாட்டை நிர்வகிக்கிறார். அதனால் அவரை அலங்காரத் தலைவர் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. இருப்பினும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை பதவியேற்க அழைப்பது, பிரதமரின் பரிந்துரைகள்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பது, அமைச்சரவையில் முடிவான சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது போன்ற முக்கிய அதிகாரம் வாய்ந்த பணிகள் குடியரசுத் தலைவர் வசமே உள்ளன.

மேலும் முக்கியமாக, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிப்பது, மாநில ஆளுநர்கள், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், வெளி நாட்டுத் தூதுவர்களை நியமிப்பதும் குடியரசுத் தலைவரே! உச்ச பட்சமாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 53-ன் படி, இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்து, கட்டளை விதிக்கும் `சுப்ரீம் கமாண்ட்’ (Supreme Command) அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கே உரித்தானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.