வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.!

புதுடெல்லி: பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முன்னதாக இன்று காலை அவையை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 18) தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. எனவே, எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்தார். அதன்படி, தலைநகர் டெல்லியில் இன்று காலை அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்பிக்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ராஷ்ட்ரிய லோக் தளம் எம்.பி ஜெயந்த் சவுத்ரி, திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுக எம்பி தம்பி துரை, ஒய்எஸ்ஆர்சிபி எம்பி விஜயசாய்  ரெட்டி, திரிணாமுல் எம்பி சுதிப் பந்தோபாத்யாய், அப்னா தளம் எம்பி  சுப்ரியா படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு அவைகளை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. புதிதாக கொண்டு வரப்பட்ட அக்னிபாதை திட்டம், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், நாடாளுமன்றத்தில் உபயோகப்படுத்தக் கூடாத வார்த்தைகள் உள்ளிட்ட பிரச்னைகளை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், இந்திய அண்டார்டிகா மசோதா, 2022 உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் மசோதாக்களையும், புதிய மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சினை (திருத்தம்) மசோதா, 2019; ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்பாடுகளுக்கு தடை) திருத்த மசோதா, 2022 ஆகியவை மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கான திட்டத்தை பாஜக அரசு வைத்துள்ளது. அதேபோல், வனவிலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021, கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா, 2019 மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா, 2021 ஆகியவை மக்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றவும், புதிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்றவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.