மக்களின் அன்பு மற்றும் மருத்துவர்களின் கனிவால் தாம் நலமுடன் பணிகளை தொடர்வதாகவும் நாளை மருத்துவமனையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 14 ஆம் திகதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமடைந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன்.
திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் (18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது.அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, ‘தமிழ்நாடு நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.