புதுடில்லி : பஞ்சாபில், ஹிந்து பூசாரி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் பற்றி துப்பு தந்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு, ஜலந்தரில் கமல்தீப் சர்மா என்ற பூசாரி கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு, கனடாவில் தலைமறைவாக உள்ள காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஹிந்து பூசாரியை கொலை செய்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றதாக, ஹர்தீப் சிங் நிஜார் உள்ளிட்ட நான்கு பேர் மீது, தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து உள்ளது.சமீபத்தில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஹர்தீப் சிங் நிஜார் பற்றி துப்பு கொடுப்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. தகவல் தருவோரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தகவல் தருவதற்கான தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களையும் தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement