இப்போது அதிகமான போட்டித்தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் கூட தங்களது நிறுவனத்திற்கு ஆன்லைனில் தேர்வு நடத்தியே வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 10வது வகுப்பு படிக்கும் மாணவர் வேதாந்த் (15) பொழுதுபோக்காக தனது தாயாரின் லேப்டாப்பில் வெப் கோடிங் எழுதும் பயிற்சியை எடுத்துக்கொண்டார். ஆன்லைனில் கிடைக்கும் வீடியோவை பார்த்து அடிக்கடி இதற்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
ஒருமுறை அவரது தாயாரின் இன்ஸ்டாகிராமில் வெப் கோடிங் எழுதும் போட்டிக்கான லிங்க் ஒன்று வந்திருந்தது. உடனே அந்த லிங்க் மூலம் கோடிங் எழுதும் போட்டியில் வேதாந்த் கலந்து கொண்டார். இதில் இரண்டு நாள்களில் 2066 லைன் கோடிங் எழுதி பரிசு பெற்றார். ஆயிரம் பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வேதாந்த்தைக் கௌரவிக்க அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரத்தைச் சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.

வேதாந்தித்திற்கு ஆண்டுக்கு ரூ.33 லட்சம் சம்பளத்தில் வேலை கொடுப்பதாக அறிவித்தது. உடனே ஆசையாக அந்த வேலையில் சேருவதற்காக வேதாந்த் தனது ஆவணங்களை அனுப்பியபோது மாணவனின் வயதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிறுவனம், பணி வாய்ப்பைத் திரும்ப பெற்றுக்கொண்டது. 15 வயது மாணவனுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. ஆனால் படிப்பு முடிந்த பிறகு தங்களைத் தொடர்பு கொள்ளும்படி அம்மாணவனிடம் அமெரிக்க நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அம்மாணவனின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் அஸ்வினி கூறுகையில், “எங்களுக்கு எதுவும் தெரியாது. மகன் படிக்கும் பள்ளியில் இருந்துதான் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள்” என்று தெரிவித்தார். தற்போது வேதாந்த்திற்கு அவனது பெற்றோர் லேப்டாப் ஒன்று வாங்கிக்கொடுக்க முடிவு செய்துள்ளனர். வேதாந்த் அறிவியல் கண்காட்சிப்போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.