புதுடில்லி :நலிவடைந்துள்ள அரசு தொலைதொடர்பு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., எனப்படும், ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ நிறுவனத்தை வலுப்படுத்த, 1.64 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதி அளிக்க, மத்திய அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த தொகையை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசு தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.,லை மீட்டெடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின், மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக, 1.64 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதி அளிக்க, அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி தொகுப்பு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும்.
இதில், 43 ஆயிரத்து 964 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 1.20 லட்சம் கோடி ரூபாய் ரொக்கம் சாராத நிதியினங்களாகவும் வழங்கப்படும்.பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ‘4ஜி’ சேவைகளை வழங்க தேவையான ‘ஸ்பெக்ட்ரம்’ நிர்வாக ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கும். 44 ஆயிரத்து 993 கோடி ரூபாய் செலவில், 900/1,800 ‘மெகா ஹெர்ட்ஸ்’ அலைவரிசையிலான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பங்குகள் வாயிலாக வழங்கப்படும்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட மூலதனச் செலவினங்களைச் சந்திக்கவும், 4ஜி தொழில்நுட்ப அடுக்கை மேம்படுத்தவும், 22 ஆயிரத்து 471 கோடி ரூபாயை அரசு அளிக்கும். மேலும், கடந்த 2014 – 15 முதல் 2019 – 20 வரையிலான காலகட்டங்களில், மிகவும் உள்ளடங்கிய ஊரகப் பகுதிகளில் தொலைதொடர்பு வசதிகள் அளித்ததற்கு செலவிடப்பட்ட 13 ஆயிரத்து 789 கோடி ரூபாய் நிதியையும், பி.எஸ்.என்.எல்.,லுக்கு மத்திய அரசு அளிக்கும்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் இருப்புநிலை அறிக்கையில் உள்ள 33 ஆயிரத்து 404 கோடி ரூபாய் நிலுவைத் தொகை, பங்கு மூலதனமாக மாற்றப்படும். தற்போது உள்ள கடன்களை அடைப்பதற்காக வெளியிடப்படும் பங்கு பத்திரங்களுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். ‘பாரத் நெட்’ மற்றும் பி.பி.என்.எல்., எனப்படும், ‘பிராட் பிராண்ட் நிகாம் லிமிடெட்’ நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்., உடன் இணைக்கப்படும்.
பாரத் நெட்டின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள், அனைத்து தொலை தொடர்பு சேவை நிறுவனங்களும் பாரபட்சமற்ற அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய தேசியசொத்தாக தொடரும்.நாடு முழுதும் உள்ள கிராமங்களில் 4ஜி சேவையை அளிக்க, 26 ஆயிரத்து 316 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மிகவும் உள்ளடங்கிய 24 ஆயிரத்து 680 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
‘5ஜி’ அகண்ட அலைவரிசை ரூ.1.49 லட்சம் கோடிக்கு ஏலம்
அடுத்த தலைமுறைக்கான ‘5ஜி’ தொழில்நுட்பத்தில் அகண்ட அலைவரிசை சேவைக்கான உரிமத்திற்கு, நேற்று முன்தினம் ஏலம் துவங்கியது. அன்றைக்கு நான்கு சுற்றுகளில், 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் கோரப்பட்டது. நேற்று ஒன்பது சுற்றுகள் முடிந்த நிலையில், 1.49 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டுள்ளதாக, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஏலம் மூன்றாவது நாளாக இன்றும் நடக்க உள்ளது.
மொத்தம், 72 ‘கிகாஹெர்ட்ஸ்’ அலைவரிசையை ஏலம் விட்டு, 4.30 லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல், குமார் மங்களம் பிர்லாவின் வோடபோன் ஐடியா, கவுதம் அதானியின் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு, அவை கோரிய அகண்ட அலைவரிசையை மத்திய அரசு வரும் செப்டம்பரில் ஒதுக்க உள்ளது. 5ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், இந்தியாவில் தகவல் தொடர்பு துறையில் புதிய புரட்சி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி தொழில்நுட்பத்தில் தகவல் அனுப்புவதை விட, 5ஜி அலைவரிசையில் 10 மடங்கு வேகமாக தகவல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். ஒரே சமயத்தில் கோடிக்கணக்கானோர் தகவல்களை பரிமாறிக் கொள்ள, 5ஜி உதவும். ஒரு திரைப்படத்தை உயர் தரத்தில் சில வினாடிகளில் பதிவிறக்கலாம். மேலும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த சுகாதாரம், வாகனம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளும் 5ஜி சேவையால் பெரிதும் பயன் அடையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்