சென்னை: தமிழகத்திலிருந்து கடத்தி செல்லப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சோழப் பேரரசி செம்பியன் மகாதேவியின் உலோக சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சோழப் பேரரசில் வலிமையான அரசியாகத் திகழ்ந்தவர் செம்பியன் மகாதேவி. ராஜராஜ சோழனின் மூதாதையரான இவர், சோழப் பேரரசில் தவிர்க்க முடியாத சக்தி யாகத் திகழ்ந்தார்.
கோயில் திருப்பணிகள்
இவரது காலத்தில்தான் செங்கல் கோயில்கள் கருங்கல் கோயில்களாக மாற்றப்பட்டன. கோயில் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட செம்பியன் மகாதேவியின் மறைவுக்குப் பின், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள செம்பியன் மகாதேவி கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் செம்பியன் மகாதேவிக்கு உலோகத்தால் சிலை அமைக்கப்பட்டது.
1000 ஆண்டுகள் பழமையான இந்தச் சிலை 1959-ம் ஆண்டுக்குப் பிறகு திருடு போனதாக யானை ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஃபிரீர் கேலரி ஆஃப் ஆர்ட் அருங்காட்சியகத்தில் 3.5 அடி உயரம் கொண்ட செம்பியன் மகாதேவிசிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாகை மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள செம்பியன் மகாதேவி சிலை போலியானது என்பதும், உண்மையான சிலை 1929-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள செம்பியன் மகாதேவி சிலையை மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.