வெளிநாட்டில் வேலைக்கு சென்றவர்களில் 3 ஆண்டில் 2,570 இந்தியர்கள் மரணம்: வெளியுறவு துறை அமைச்சர் தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்களில் கடந்த 3 ஆண்டில் 2,570 இந்தியர்கள் மரணம் அடைந்ததாக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களில், கடந்த 3 ஆண்டுகளில் 2,570 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இவற்றில் 2,478 இறப்பு வழக்குகள் அந்தந்த நாடுகளின் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தீர்க்கப்பட்டுள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களின் இறப்புகள் அல்லது அவர்கள் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய பல மொழிகளில் 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப்லைன் மற்றும் ஆன்லைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வௌிநாட்டில் இந்தியர் ஒருவர் இறந்தால், சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மூலம் இறப்பு பதிவு, தகனம் அல்லது புதைத்தல் அல்லது உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புதல் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. மரணத்திற்குப் பிறகு இழப்பீடு பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு உதவுவதற்காக இந்திய சமூக நல நிதியம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு காப்பீடு தொகையும் ஒன்றிய அரசு செய்கிறது. விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய் காப்பீடு மற்றும் இதர சலுகைகள் மூலம் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.