சென்னை, வேப்பேரியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் அருகில் மாணவ-மாணவிகளின் விடுதிகள் இருக்கின்றன. இந்த நிலையில், விடுதியில் நேற்றிரவு இரண்டு மாணவிகள் சாப்பிட்ட சிறிது நிமிடங்களிலேயே மயங்கி விழுந்தனர். அதைப்பார்த்த சக மாணவிகள், விடுதி வார்டனுக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்தில் உணவில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பெரியமேடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இருவரும் லேப்பிலிருந்து திரவத்தை எடுத்துவந்து அதை இரவு உணவில் கலந்து சாப்பிட்டது தெரியவந்தது. அவர்களிடம் ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தீர்கள் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிகிச்சை பெற்றுவரும் இரண்டு மாணவிகளும் நலமாக இருக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
இது குறித்து போலீஸார், “இரண்டு மாணவிகளும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவிகளிடம் சகஜமாக பேசுவதில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இரண்டு மாணவிகளும் மன அழுத்தத்தில் இருந்தாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவக் கல்லூரி ஆய்வகத்திலுள்ள திரவம் ஒன்றை எடுத்து உணவில் கலந்து சாப்பிட்டிருக்கின்றனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய்வின் முடிவில்தான் அவர்கள் எந்த வகையான திரவத்தை பயன்படுத்தினார்கள் என்ற தகவல் தெரியவரும். மாணவிகளின் இந்தத் தற்கொலை முயற்சிக்கு என்னக் காரணம் என்று விசாரணை நடந்துவருகிறது. தற்போது இருவரும் சிகிச்சையில் இருப்பதால் அவர்களிடம் விரிவாக விசாரணை நடத்த முடியவில்லை. சிகிச்சைக்குப்பிறகு இருவரிடமும், கல்லூரி முதல்வர், விடுதி வார்டன் ஆகியோரிடம் விசாரணை நடத்தவிருக்கிறோம்” என்றனர்.