புதுடெல்லி: ‘சென்னையில் நீர் மேலாண்மைக்காக புதிய திட்டங்களை ஒன்றிய அரசு வகுத்துள்ளதா’ என மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மக்களின் குடிநீர் வசதி, நீர் மேலாண்மையில் அதிகம் கவனம் செலுத்தும். அந்த வகையில் 2010ம் ஆண்டு கலைஞரின் ஆட்சியில் ரூ.1000 கோடி செலவில் வடசென்னை மீஞ்சூரிலும், ரூ.908 கோடி செலவில் தென்சென்னை நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் தொடங்கப்பட்டன. 2007ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, சென்னை நெம்மேலியில் நடைபெற்று வரும் கடல் நீரை குடிநீராக்கும் 3வது நிலையத்தின் பணியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பார்வையிட்டு, பணியை விரைவாக முடிக்கும்படி அறிவுறுத்தினார். இதேபோல், சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசில், ரூ.738 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு:* சென்னையில் நீர் மேலாண்மைக்காக புதிதாக முன்மொழியப்பட்ட திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் விவரங்களை தெரியப்படுத்தவும். * ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் நாட்டின் முக்கிய நகரங்களில் 2014ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட அனைத்து புதிய வசதிகளின் விவரங்கள், அத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? அத்திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதையும் மாநிலங்கள் வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும்.* நாடு முழுவதும் நீர் சேமிப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்கும், பராமரிப்பதற்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை மாநிலங்கள் வாரியாக தெரியப்படுத்தவும்.* சென்னை போன்ற முக்கிய நகரங்களில் நீர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனையின் விவரங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?* நீர் மேலாண்மைக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏதேனும் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதா? தொழிற்சாலைகளின் குடிநீர் அல்லாத நீர் தேவைகளுக்காக நீர் மறுசுழற்சி செய்வதை ஆதரிக்க அல்லது ஊக்குவிக்க அமைச்சகத்திடம் ஏதேனும் முன்மொழிவு உள்ளதா? அவ்வாறெனில், அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.