கோலிவுட் ஸ்பைடர்: விஜய் – அஜித் இணையும் படத்தின் ஸ்டேட்டஸ் அப்டேட்; சூர்யாவின் புதிய திட்டம்!

* தீவிர ஓய்வில் இருக்கிறார் விக்ரம். ஆறு மாதங்களாவது இப்படி ஒரு ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதனால் வீட்டிலேயே ஓய்விலிருந்து வருகிறார். இதற்கிடையே ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கான பேட்ச் ஒர்க் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஷூட் இல்லாமலேயே படத்தை முடித்துக் கொள்ளலாமா என்ற யோசனையும் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இருக்கிறதாம். துருவ் நடிப்பதற்கான மாரி செல்வராஜ் படத்தின் ஸ்கிரிப்ட்டும் இப்போதைக்கு ரெடி இல்லையாம். ‘மாமன்னன்’ ஷுட்டிங் முடிந்து, அந்தப் படமும் வெளியான பின்புதான் துருவ் படப்பிடிப்பு நடக்கும் என்கிறார்கள். அதில் கால்பந்து வீரர் கேரக்டர் என்பதால் அதற்கான பயிற்சி துருவிற்குக் கொடுக்கப்படுகிறது. விக்ரமிற்கு இருந்த உடல் சோர்வும், ‘பொன்னியின் செல்வ’னுக்காக எடுத்த கடுமையான குதிரையேற்ற பயிற்சிகளில் ஏற்பட்டது என்கிறார்கள்.

விக்ரம்

* சென்னையில் பிரதமரும், முதல்வரும் கலந்து கொண்ட செஸ் விளையாட்டுக்கான விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது நடந்த விஷயம் ஒன்று இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அன்று காஸ்ட்லியான பைக் ஒன்று நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அங்கேயும் இங்கேயுமாக குறுக்கே சென்று, அதைத் தாண்டி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கும் சென்றதாம். காவல்துறையினரிடம் இது பற்றி வாய்மொழியாகச் சொல்லவும், அது படப்பிடிப்பில் பயன்படுத்துவதற்காக நடிகர் அஜித் பயன்படுத்தும் வண்டி எனத் தெரிய வந்திருக்கிறது. அடுத்தடுத்த வேண்டுகோள்களுக்குப் பிறகுதான் அந்த பைக்கை ரிலீஸ் செய்தனர் காவல்துறையினர். வேறு ஒருவர் செய்த இந்தத் தவறினால் ஏ.கே வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

* வெங்கட் பிரபுவிடம் விஜய்க்கும் அஜித்திற்குமான ஒரு ஸ்கிரிப்ட் இருப்பது உண்மைதானாம். அதை மெருகேற்றும் வேலை இரண்டு இயக்குநர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஓய்வு இல்லாமல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறதாம். அஜித்திடம் அந்தக் கதையைச் சொல்லி அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட ஓகே சொல்லிவிட்டாராம். இப்படி ஒரு விஷயம் இருப்பது விஜய்க்கும் தெரியப்படுத்தப்பட்டு விட்டது. விஜய்யும், வெங்கட் பிரபுவும் நல்ல அலைவரிசையில் இருப்பதால் இதற்கான வாய்ப்பு 50 சதவிகிதம் இருப்பதாகப் பேச்சு அடிபடுகிறது. ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அவரது கதையைக் கேட்பதாக விஜய் உறுதி அளித்திருக்கிறார். விஜய்யும் அஜித்தும் இப்பொழுதெல்லாம் நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். அதனால் படம் பெரிய அளவில் வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

வெங்கட் பிரபு

* சூர்யா இனிமேல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களுக்கு மேல் செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார். அதுவும் நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் மட்டும்தானாம். அகரம் பவுண்டேஷனில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தப் போகிறாராம். அதற்காகக் கல்வி வல்லுநர்களையும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்களையும் தொடர்ந்து சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் ஞாயிறுகளை அதற்கெனவே பயன்படுத்திக் கொள்ளவும் போகிறார். தன் பவுண்டேஷன் தேர்ந்தெடுக்கும் மாணவர்களைத் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வைக்குமாறு பேச்சு வார்த்தைகளும் ஒரு பக்கம் நடக்கின்றன. அதேபோல், அவர் இப்போது பாலாவின் படத்தை முடித்துக் கொடுக்கும் வேலைகளிலும் தீவிரமாக இருக்கிறார்.

ஹன்சிகா

* கல்யாணம் செய்து கொள்ளும்படி ஹன்சிகாவை வலியுறுத்துகிறார் அவரது டாக்டர் தாயார். அவரும் மகளும் கஷ்டப்பட்டு சம்பாதித்தது எல்லாம் சொந்தப்படம் எனத் தயாரித்ததில் பிரச்னையாகியிருக்கிறது. தியேட்டர் ஷேர்கள் எதுவும் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஹன்சிகாவின் கைகளுக்குப் போய்ச் சேரவில்லையாம். அதனால் இப்போது பிரச்னையின் பிடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சம்பளப் பாக்கி இன்னும் செட்டில் செய்யாமல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். படத்தை வெளியிட்டும் கொஞ்சமும் வெற்றிக்கான அம்சம் தெரியாத காரணத்தால் சென்னையிலிருந்து மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார் நடிகை. படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்புவும் சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் ஃப்ரீயாக நடித்துக் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இப்போது ஹன்சிகா பிரச்னையில் இருப்பதால் சிம்பு தன் அடுத்த படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளரிடம் ஹன்சிகாவை இணை தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி, அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ‘ஆரம்பத்திலேயே நமக்குப் படத் தயாரிப்பு வேண்டாம்’ என தன் அம்மா சொன்னதைக் கேட்காமல் விட்டுவிட்டேனே என நடிகை இப்போது நண்பர்களிடம் புலம்புவதாகச் சொல்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.