கஞ்சா வியாபாரிகளின் 141 பேரின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் 62 புதிய கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டினை காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று துவக்கி வைத்தார்.
இதில் மூன்றாவது கண் எனப்படும் 10 அதிநவீன வாகன எண்களை கண்டறியும் கேமராக்கள் ( Advanced number plate recognized camera ) உள்ளிட்ட 62 கேமராக்கள் ரூ.10.40 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இன்று துவக்கி வைக்கப்பட்டன.

இதனால் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.இந்த அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்கள் திருடு போனாலோ அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ அந்த வாகனத்தின் எண் – ஹெல்மெட் போட்டுள்ளாரா..? சீட் பெல்ட் போட்டுள்ளனரா? வாகனத்தின் உரிமையாளர் குறித்த விவரங்கள் கணினியில் சேமிக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவிக்கையில் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கஞ்சா விற்பனையாளர்கள் 67 பேரும் – டீலர்கள் 47 பேரும் கைது செய்யப்பட்டு.

50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும் இதைத் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் கஞ்சா வியாபாரிகள் 50 பேரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் மூலம் 13 பேருக்கு நீதிமன்றம் மூலம் பிணையம் மறுக்கப்பட்டுள்ளதாகவும்
இந்த ஆண்டில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரின் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது எனவும்,ஏற்கனவே கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த 2 பேரின் சொத்துக்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகவும்.

மேலும் 141 பேரின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இந்நிகழ்வின் போது வருவாய் கோட்டாட்சியர் பூமா, டிஎஸ்பி பாலாஜி,இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன்,உதவி ஆய்வாளர்கள் செல்வநாயகம்,முருகநாதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : பி.ரஹ்மான், கோவை