வங்கிகள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் இன்றியமையாத ஒன்று என்பதால் உலகின் அனைத்து நாடுகளிலும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என பல பிரிவாக இயங்கி வரும் நிலையில் உலக அளவிலும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் உள்ளன.
அந்த வகையில் உலக அளவில் சொத்து மதிப்பின் அடிப்படையில் 10 பெரிய வங்கிகள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி லிமிடெட் (ICBC)
மொத்த சொத்துக்கள்: US$5,107.54 பில்லியன்
பெய்ஜிங், சீனா
சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கி லிமிடெட் சீனாவிலும் உலகிலும் மிகப்பெரிய வங்கியாகும். 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுவப்பட்ட இந்த வங்கி, 70% அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் ஆகும். 2017ஆம் ஆண்டில், சீனாவின் வங்கிக் கடனில் 12% இந்த வங்கியை கொண்டிருந்தது. அதில் பெரும்பகுதி கட்டுமானம் மற்றும் போக்குவரத்து துறைகளில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், சில்லறை மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு தனது வணிகத்தை சிறப்பாக நடத்தி வருகிறது.

2. சீனா கட்டுமான வங்கி கார்ப்பரேஷன் (CCB)
மொத்த சொத்துக்கள்: US$4,309.08 பில்லியன்
பெய்ஜிங், சீனா
பெய்ஜிங்கில், அரசாங்க வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக, 1954ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சீனாவின் மக்கள் கட்டுமான வங்கியாக CCB வங்கி நிறுவப்பட்டது. இந்த வங்கி வணிக வங்கியாக மாற்றப்பட்டு 1996ஆம் ஆண்டு சீனா கட்டுமான வங்கி கார்ப்பரேஷன் ஆனது. 2021ஆம் ஆண்டு வரை, இந்த வங்கி 31 நாடுகளில், 200 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

3. சீனாவின் விவசாய வங்கி (ஏபிசி)
மொத்த சொத்துக்கள்: US$4,167.06 பில்லியன்
பெய்ஜிங், சீனா
சீனப் புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 10, 1951ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. சீனாவின் விவசாய வங்கி கூட்டுப்பண்ணைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்டது. அரசுக்கு சொந்தமான இந்த வங்கி 1990களில் அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்தியது. விவசாயம் அல்லாத வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு கடன்களை வழங்கத் தொடங்கியது. 2007ஆம் ஆண்டு இந்த வங்கியின் ஊழியர் ஒருவர் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபகரித்ததால், சீனாவின் வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை என்ற தலைப்பு செய்தியிலும் இடம்பெற்றது.

4. பேங்க் ஆஃப் சீனா (BOC)
மொத்த சொத்துக்கள்: US$3,737.81 பில்லியன்
பெய்ஜிங், சீனா
சீனாவின் இம்பீரியல் வங்கியை நாட்டின் மத்திய வங்கியாக மாற்றுவதற்காக 1912ஆம் ஆண்டு பேங்க் ஆஃப் சீனா உருவாக்கப்பட்டது. சீனாவின் மத்திய வங்கி 1928ஆம் ஆண்டு பொறுப்பேற்றது. சீன மக்கள் குடியரசு 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, நான்கு பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில், அந்நியச் செலாவணி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே வங்கியாக பேங்க் ஆஃப் சீனா வங்கி இருந்தது. கூடுதலாக, பேங்க் ஆஃப் சீனா நாட்டின் மிக சர்வதேச வங்கி மட்டுமின்றி உலகம் முழுவதும் இதற்கு கிளைகள் உள்ளன.

5. மிட்சுபிஷி UFJ நிதிக் குழு (MUFG)
மொத்த சொத்துக்கள்: US$3,407.80 பில்லியன்
டோக்கியோ, ஜப்பான்
மிட்சுபிஷி யுஎஃப்ஜே நிதி குழுவானது ஜப்பானின் இரண்டு பெரிய வங்கிகளான மிட்சுபிஷி டோக்கியோ பைனான்சியல் குரூப் இன்க் மற்றும் யுஎஃப்ஜே ஹோல்டிங் இன்க் ஆகியவற்றின் இணைப்பிலிருந்து 2005ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று உருவாக்கப்பட்டது. 50 நாடுகளில் இதன் கிளைகள் உள்ளன.

6. ஜேபி மோர்கன் சேஸ்
மொத்த சொத்துக்கள்: US$3,386.07 பில்லியன்
நியூயார்க், அமெரிக்கா
2000ஆம் ஆண்டு டிசம்பரில் சேஸ் மன்ஹாட்டன் வங்கி மற்றும் ஜே.பி. மோர்கன் ஆகியவற்றின் இணைப்பிலிருந்து நிறுவப்பட்டது. ஹோல்டிங் நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் இன்று அமெரிக்காவில் மிகப்பெரிய வங்கியாக உள்ளது.

7. பிஎன்பி பரிபாஸ்
மொத்த சொத்துக்கள்: US$3,080.55 பில்லியன்
பாரிஸ், பிரான்ஸ்
2000 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த வங்கி Banque Nationale de Paris (BNP) மற்றும் Paribas ஆகியவற்றின் இணைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. BNP பரிபாஸ் இப்போது 68 நாடுகளில் 193,319 ஊழியர்களுடன் ஒரு சர்வதேச வங்கியாக உள்ளது. இது தனிநபர்களுக்கான வணிக வங்கியாகவும் கார்ப்பரேட் மற்றும் நிறுவன வங்கியாகவும் செயல்படுகிறது.

8. எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சி
மொத்த சொத்துக்கள்: US$2,984.16 பில்லியன்
லண்டன், ஐக்கிய இராச்சியம்
ஹாங்காங் & ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் வங்கி 1865ஆம் ஆண்டில் ஹாங்காங்கை தளமாக கொண்ட பிரிட்டிஷ் தொழில்முனைவோர்களால் ஐரோப்பா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐக்கிய இராச்சியம் என விரிவுபடுத்தியது. 1991ஆம் ஆண்டு இது ஒரு ஹோல்டிங் நிறுவனமாக மறுசீரமைக்கப்பட்டு, HSBC ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆனது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி மற்றும் 2000 களில் நடந்த சுவிஸ்லீக்ஸ் ஊழல் தொடர்பாக பணமோசடி செய்தல் உட்பட பல சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இந்த வங்கி சிக்கியதாகவும் கூறப்பட்டது.

9. பாங்க் ஆஃப் அமெரிக்கா (BOA)
மொத்த சொத்துக்கள்: US$2,819.63 பில்லியன்
சார்லோட், அமெரிக்கா
பாங்க் ஆஃப் அமெரிக்கா (BOA) 1930ஆம் ஆண்டு நவம்பரில் பாங்க் ஆஃப் இத்தாலி மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா ஆஃப் கலிபோர்னியா ஆகியவற்றின் இணைப்பிலிருந்து நிறுவப்பட்டது. 1958ஆம் ஆண்டு BOA முதல் கடன் அட்டையை அறிமுகப்படுத்தியது இந்த வங்கி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

10. கிரெடிட் அக்ரிகோல்
மொத்த சொத்துக்கள்: US$2,741.77 பில்லியன்
மாண்ட்ரூஜ், பிரான்ஸ்
“பசுமை வங்கி” என்று அழைக்கப்படும் கிரெடிட் அக்ரிகோல் 1894 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நீண்ட கால கடன் பெறுவதில் சிரமத்தை போக்கவும், சிறிய பிரெஞ்சு விவசாயிகளுக்கு உதவுவதற்காக இந்த வங்கி நிறுவப்பட்டது.
The 10 biggest banks in the world
The 10 biggest banks in the world | உலகின் 10 பெரிய வங்கிகள்.. அதில் சீன வங்கிகள் மட்டும் இத்தனையா?