ஐதராபாத்: தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வந்த சார்மி, இப்போது படங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழில் காதல் அழிவதில்லை,. ஆஹா எத்தனை அழகு என சில படங்களில் நடித்துள்ளார் சார்மி.
இந்நிலையில் நடிகை சார்மி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவருக்கும் திருமணம் என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
கிளாமர் குயின் சார்மி
2000ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கில் அறிமுகமான கவர்ச்சி நடிகைகளில் ரொம்பவே முக்கியமானவர் சார்மி, தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ‘காதல் அழிவதில்லை’ படத்திலும் தனது கிளாமரால் ரசிகர்களை சூடேற்றினார். தொடர்ந்து தமிழில் காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பில் இறங்கிய சார்மி
தெலுங்கில் முன்னனி நடிகர்களுடன் ஜோடிபோட்டு அசத்திய சார்மி, கடந்த சில வருடங்களாக படங்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பைசா வசூல், மெகபூபா, ரொமாண்டிக் ஆகிய படங்களை இணைந்து தயாரித்துள்ள சார்மி, இப்போது விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தையும் இணைந்து தயாரித்துள்ளார். மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘லைகர்’, வரும் 25ம் தேதி வெளியாகிறது.

சார்மியின் காதல் கிசு கிசு
‘காதல் அழிவதில்லை’ படம் வெளியான போதே சிம்புவுக்கும் சார்மிக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், அது பொய்யாகிப் போக, அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் சார்மிக்கு காதல் என தகவல்கள் வெளியாகின. இறுதியாக தெலுங்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார் சார்மி. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இறுதியில் இதுவும் பொய்யானது.

பூரிஜெகன்நாத் விளக்கம்
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இயக்குநர் பூரி ஜெகன்நாத், சார்மி இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. இருவரும் காதலித்து வருவதாகவும், ‘லைகர்’ படத்தின் ரிலீசுக்குப் பின்னர் திருமணம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் பூரி ஜெகன்நாத் இதனை மறுத்துள்ளார்.

சார்மி நல்ல சிநேகிதி
“எனக்கு சார்மி பல விஷயங்களில் ஆதரவாக இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்கிறோம். சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றனர். காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள்தான் நட்புதான் நிரந்தரம். சார்மியை எனக்கு 13 வயதில் இருந்தே தெரியும். 20 ஆண்டுகளாக அவர் எனக்கு நல்ல சிநேகிதி. எங்களுக்குள் எந்த தவறான உறவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.