ஜிஎஸ்டி வரி வருவாய் எகிற என்ன காரணம்? அடடா… இந்த விஷயத்தை கவனிச்சிங்களா!

‘ஒரே நாடு- ஒரே வரி’ திட்ட்த்தின் கீழ் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. மொத்தம் சுமார் 1,300 பொருட்களுக்கும், 500 விதமான பல்வேறு சேவைகளுக்கும் 5%,12%, 18%, 28% என நான்கு வகையின்கீழ் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும்போது, தினமும் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் ஏன் இன்னும் ஜிஎஸ்டியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதேபோன்று அரிசி கோதுமை, பால், தானிய வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் அண்மையில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்வாறு ஜிஎஸ்டி தொடர்பான கேள்விகளும், சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டிருக்க, கடந்த நிதியாண்டில் (2021 -22) ஜிஎஸ்டி வருவாய் எகிறியிருந்தது. இந்த நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி லருவாய் 1. 23 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022 மார்ச் மாதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 1.42 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகி இருந்தது. இதுவே நடப்பு நிதியாண்டின் (2022 -23) முதல் காலாண்டில் ஜிஎஸ்டி வருவாய் சராசரியாக 1.51 லட்சம் கோடியாகவும், கடந்த ஜூன் மாதம் 1.44 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது.

போலி ரசீதுகள் சமர்பிப்பு போன்ற பல்வேறு வரி எய்ப்பு வழிமுறைகள் தடுக்கப்பட்டுள்ளதன் பயனாகவே ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது என்பதுடன், பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளதற்கு இதுவே அடையாளம் என்றும் மத்திய அரசு பெருமை பேசி வருகிறது.

ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால், அவற்றின் மீது விதிக்கப்புடும் வரியும் உயரதானே செய்யும்? இதுவும் ஜிஎஸ்டி வருவாய் பெருகுவதற்கு முக்கிய காரணம் என்று கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

உதாரணமாக, கடந்த மார்ச் மாதம் 19 ஆம் தேதி சந்தை நிலவரப்படி 189 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் surf Excel Liqid, 29 ஆம் தேதி 199 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பத்தே நாளில் 10 ரூபாய் விலை உயர்வு. மொத்த எடையும் 1.02 லிட்டரில் இருந்து 1 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மூன்று மாதங்களுக்கு முன்பு வரை மருந்தகங்களில் 1,120 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த புற்றுநோயாளிகளுக்கான புரோட்டீன் பவுடர் தற்போது 1,300 ஆக விலை தாறுமாறாக ஏறி உள்ளது. இப்படி சில நாட்கள் இடைவெளியிலோ, சில மாதத்துக்குள்ளாகவோ பொருட்களி்ன் விலையை ஏற்றினால் ஜிஎஸ்டி வசூல் எகிறிதான் செய்யும். இதில் பெருமைப்படுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

உண்மையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதே மக்கள் நலன்சார்ந்த அரசின் தலையாய கடமை என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.