சென்னை: தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல்:
நீங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் மிகச் சிறந்த திட்டம் என்று எதை கூறுவீர்கள், ஏன்?
தாயிடம், பிடித்த குழந்தை எது என்று கேட்கப்படுவதாகவே உணர்கிறேன். அனைத்து திட்டங்களும் தமிழக முதல்வரின் குழந்தைகள்தான். ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்துக்கு ஊடகங்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு கலை வடிவங்களை கற்பதற்கான முயற்சியாக சமீபத்தில் கலை பண்பாடு கொண்டாட்டம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காக கடந்த ஜூலை 27-ம் தேதி மனநலம் உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். அதேபோல, மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்தும் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. ஜூலை 6-ம் தேதி கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் ‘சிறார் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து, சார்லி சாப்ளினின் ‘தி கிட்ஸ்’ திரைப்படத்தையும் திரையிட்டோம். இவை அனைத்தும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும். மேலும் தேர்வு மட்டுமே மாணவர்களை தகுதியடையச் செய்யாது என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். இந்த அனைத்து புதிய திட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கரோனா காலத்தில் மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காக தொடங்கப்பட்ட ‘இல்லம் தேடி கல்வி’ மையங்கள் இன்னும் தேவையா?
கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவில் மனதளவில் பாதித்தது. தற்போது, தான் சார்ந்திருக்கிற ஊரிலேயே இளைஞர்கள் மூலமாக கல்வியை மாணவர்கள் மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஜூலை 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இத்திட்டம் தொடரும். அது அவசியமும்கூட.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது, பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 100% சென்று சேர்ந்துவிடும். தற்போதைய ஆட்சியில் தாமதம் நிலவுகிறதே.. காலணி, புத்தகப்பை உள்ளிட்டவை விநியோகத்திலும் தொய்வு ஏற்படக் காரணம் என்ன?
அதிமுக ஆட்சியிலும் சில ஆண்டுகளில் இவை தாமதமாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2016-17-ல் கல்வி உபகரணங்களை 14 மாதங்கள் தாமதமாக வழங்கியவர்கள் இப்போது குற்றம் சொல்கிறார்கள். ‘எக்காரணத்திலும் மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குவதில் தாமதம் கூடாது’ என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தற்போது நோட்டு புத்தகங்கள், சீருடைகள் 100% விநியோகம் முடிந்துவிட்டது. 2021-22-ம் ஆண்டுக்கான மிதிவண்டிகளை பொருத்தவரை 56% மிதிவண்டிகள் கிடைத்துள்ளன. இதில் இதுவரை 12% மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டோம். மற்ற பொருட்களும் விரைவில் வழங்கப்படும்.
கரோனா பரவலுக்கு பிறகு சுமார் 5 லட்ச மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி, அரசுப் பள்ளிகளில் சேர்ந்தனர். ஆனால், போதிய கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் வரை மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு சென்று விட்டனர். அரசுப் பள்ளிகளை நாடி வந்த மாணவர்களை தக்கவைக்க அரசு தவறிவிட்டதா?
‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்’ எனும் கொள்கையை நோக்கித்தான் எங்கள் பயணம் செல்கிறது. இதுவரை இல்லாத வகையில், பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீததொகையை பள்ளிகளுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்றும் அரசுஅறிவுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளைவிட கூடுதலாகவே மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
அரசுப் பள்ளிகளில் 17 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் தேவைஉள்ளது. இந்த விவகாரத்தை கல்வித்துறை மெத்தனமாக கையாள்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே..
மெத்தனம் எதுவும் இல்லை. மாணவர்களின் நலனுக்காகவே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையில் இறங்கினோம். அதற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு மாணவர்களின் கற்றலுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறோம். தீர்ப்பு வந்த பிறகு, அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். இதற்கிடையே விரைவில் 3,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை பரிசீலனை செய்யாமல், மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது ஏன்?
மாணவர்களின் கற்றல் திறனும், கற்பித்தல் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் கற்பிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைதான் இது.
ஆசிரியர், மாணவர் வருகைப் பதிவேடு மட்டுமின்றி தினமும் ஏராளமான தகவல்களை ‘எமிஸ்’ செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டிஉள்ளதாகவும், இணைய தொடர்பு போதிய அளவில் இல்லாத கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் கற்பித்தல் – கற்றல் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்களே..
மாணவர்களின் வருகை, அவர்களது உடல்நலம், கற்றல் திறன் என அனைத்து தகவல்களும் நமது கைகளில் இருக்கும்போது கல்வி சார்ந்தமுன்னெடுப்புகளை மிக வேகமாக, துல்லியமாக செய்யலாம். பள்ளிக்கல்வித் துறையை தவிர்த்து கிட்டத்தட்ட 10 துறைகளுக்கு ‘எமிஸ்’ செயலி பயன்படும் என்பதுதான் உண்மை.
நீங்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளதே? தனியார் பள்ளிகளின் அதிக கல்விக் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களிலும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
எந்த ஒரு பள்ளிக்கும் ஆதரவான மனநிலையை எப்போதும் நான் எடுப்பதில்லை. அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான கொள்முதல் பணிகளை இன்னும் எல்காட் தொடங்கவில்லை. மாணவர் எண்ணிக்கை விவரங்களை பள்ளிக்கல்வித் துறை தாமதமாக வழங்கியதாக எல்காட் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்படுகிறதே..
கரோனா கால சிக்கல்களில் இதுவும் ஒன்று. மாணவர் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாததற்கு அதுவே காரணம். தவிர, எல்காட் நிறுவனத்துக்கு சரியான மாணவர் எண்ணிக்கை வழங்கவில்லை என்று துறை ரீதியான புகார் எதுவும் வரவில்லை. இரு தரப்பும் இணைந்தே பணியாற்றுகின்றன. கரானா காலத்தில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி குறைந்ததாலும் உரிய காலத்தில் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதில் இடர்ப்பாடு நிலவுகிறது.
‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின்படி கற்பிக்க ஆசிரியர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இதைவிட எளிமையாக வேறு சிறந்த வழிமுறைகள் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறதே?
2025-ம் ஆண்டுக்குள் தன்னிறைவான எழுத்தறிவு பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவி மீண்டும் கொண்டு வரப்படுமா? ஐஏஎஸ் அதிகாரிகளால் இப்பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறதா? அவர்களது கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா?
மாணவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்த செயலாக இருந்தாலும், அதை யார் கூறினாலும் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். அதேநேரம், பணிகள் சுணக்கமாக இருக்கிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. முந்தைய காலங்களைவிட சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆணையர், இயக்குநர் நியமன விவகாரங்களில் முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும்.
STEM பயிற்சித் திட்டம், கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் போன்ற விவகாரங்களில் அடுத்தடுத்து குழப்பமான அறிவிப்புகள் வந்தன. இதற்கு என்ன காரணம்?
அரசு துறையுடன் இணைந்து STEM லேப் திட்டங்களை செயல்படுத்தலாம் என முடிவெடுத்த பிறகுதான் தனியாருக்கான அனுமதியை ரத்து செய்தோம். கடந்த ஜூன் 20-ம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சியையும் செய்து முடித்தோம். கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனத்தை விமர்சித்து சில தினங்களுக்கு முன்னதாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டன. அதற்கு மதிப்பளித்து, அந்த நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளோம்.
சமீபகாலமாக, பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்குஎதிரான அதிருப்தி மனப்பான்மை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறதே..
மாதம் ஒரு முறை ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து வருகிறேன். ‘ஆசிரியர்களுடன் அன்பில்’ என்ற நிகழ்வு மூலமாகவும் அவர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். எனது வீட்டிலும், தலைமைச் செயலக அலுவலகத்திலும் ‘ஆசிரியர் மனசு’ புகார் பெட்டி வைத்துள்ளோம். மேலும் அவர்கள் என்னை எளிமையாக தொடர்பு கொள்ள வசதியாக மின்னஞ்சல் முகவரிகளையும் அறிமுகம் செய்துள்ளேன். இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அவற்றை முறைப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளோம். இப்போதும் ஆசிரியர்களிடம் ‘இது நமது ஆட்சி’ என்கிற மனநிலை இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
தேர்வு மட்டுமே மாணவர்களை தகுதியடையச் செய்யாது. அனைத்து புதிய கல்வித் திட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.