கோவாவில் இரவு பார்ட்டி; மர்மமான முறையில் இறந்த பாஜக பெண் பிரமுகர்! – சிபிஐ விசாரணை கோரும் குடும்பம்

ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ.க பெண் தலைவர் சோனாலி போகத் தன் நண்பர்கள் சிலருடன் கோவாவுக்குச் சென்றிருந்தார். அவர் கோவாவில் திங்கள்கிழமை இரவு ரெஸ்டாரண்ட் ஒன்றில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்துகொண்டார். பார்ட்டியில் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அவருக்கு வயது 42. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சோனாலி

நடிகையான சோனாலி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்ததோடு, ஏராளமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதோடு வெப் சீரிஸ்களிலும் நடித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட சோனாலி, 2019-ம் ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சோனாலியின் தற்கொலை தங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சகோதரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சகோதரி ராமன் கூறுகையில், “சோனாலி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சோனாலி

அவருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதில்லை. அவர் முழு உடல் நலத்துடன் இருந்தார். எனவே இந்த மரணம் குறித்து சிபிஐ மூலம் முழுமையாக விசாரிக்கவேண்டும்.

சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு என் சகோதரி எனக்கு போன் செய்து பேசினார். வாட்ஸ்அப் காலில் பேசவேண்டும் என்று தெரிவித்தார். அதோடு ஏதோ நடக்கிறது என்று தெரிவித்தார். உடனே போனை கட் செய்துவிட்டார். அதன் பிறகு அவர் போனை எடுக்கவே இல்லை.

சோனாலி என் தாயாருக்கும் போன் செய்து பேசியிருக்கிறார். சாப்பிட்ட பிறகு தன் உடல் நிலை சரியில்லை என்று தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஏதோ சரியில்லாமல் இருக்கிறது. எனக்கு எதிராக ஏதோ சதி நடப்பது போன்று உணர்கிறேன் என்று தாயாரிடம் தெரிவித்தார். காலையில் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது” என்று தெரிவித்தார்.

ஹரியானா காங்கிரஸ் கட்சியும் சோனாலி மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இறந்துபோன சோனாலிக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவர் கணவரும் தனது 42 வயதில் இறந்துவிட்டார். சோனாலியின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை என்று மாநில டி.ஜி.பி ஜெஸ்பால் சிங் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மையான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.