தினமும் 10 லட்சம் புகார்கள் வருகிறது இணையதளங்களில் பதிவிடும் தவறான பதிவுகளை நீக்க 36 மணி நேரம் ஆகும்: கூகுள் தென்மண்டல அதிகாரி தகவல்

சேலம்: இணையதளங்களில் பதிவிடும் தவறான தகவல்களை நீக்க 36 மணி நேரம் ஆகும் எனவும், இவ்வாறு தினமும் 10 லட்சம் புகார்கள் வருவதாக கூகுளின் தென்மண்டல அதிகாரி தெரிவித்தார். கூகுளின் தென்மண்டல நோடல் அதிகாரி மஞ்சுநாத், சேலம் மாநகரம், மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் உதவி கமிஷனர்கள் உள்பட 53 போலீசார் கலந்து கலந்து கொண்டனர்.

அப்போது பல்வேறு சந்தேகங்களை போலீசார் கேட்டனர். மோசமான பதிவுகளை எவ்வாறு உடனடியாக நீக்குவது? இதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்து கேட்டனர். இதற்கு தென்மண்டல நோடல் அதிகாரி மஞ்சுநாத் கூறியதாவது, ஒருவர் மீது ஒருவர் தவறான தகவல்களை பரப்புவது என்பது அதிகரித்து வருகிறது. மெயில் மூலமாக மிரட்டல் விடுப்பது, புகைப்படங்களை மார்பிங் செய்து அப்லோடு செய்வது என்பது போன்ற எண்ணற்ற புகார்கள் வருகிறது. தவறு என்பது தெரியாமல் கூட பதிவிட்டுவிடுகிறார்கள். இவ்வாறு நாள் ஒன்றுக்கு உலகம் முழுவதிலுமிருந்து 10 லட்சம் புகார்கள் கூகுளுக்கு வருகிறது. இவற்றுக்கு பதில் அளித்துக்கொண்டே இருக்கிறோம்.

தவறான பதிவை நீக்கவேண்டுமானால் அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதற்கான சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி அந்தந்த அரசின் மூலமாக வரும் மனுக்கள் மீதுதான் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக பதிவை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குறைந்தது 36 மணி நேரம் வரை ஆகும். ரகசியமாக ஒருவர் மெயில் அனுப்புவதாக அவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் யார்? எங்கிருந்து மெயில் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தனியார் இதனை வாங்க முடியாது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.