பன்னாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அது வித்திடும் என்பதால், தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அண்டை மாநிலங்களை விட முதல்வர்
ஸ்டாலின்
கூடுதல் அக்கறை காட்டி வருகிறார். இதற்காக துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்து பல கோடி ரூபாய் முதலீடுகளை அவர் ஈர்த்து வருகிறார். நிறுவனங்கள் தொழில் தொடங்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்வதற்கேற்ற சூழலும் தமிழகத்தில் உருவாக்கித் தரப்படுகின்றன. தொழில் தொடங்குவதற்கான சூழல் ஒற்றைச்சாளர முறையில் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 50 சதவீதத்துக்கும் மேலாக சென்னையையே மையப்படுத்தி நடந்து வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள உட்கட்டமைப்பு வசதி முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் சென்னையை சுற்றியே அமைக்கப்படுவதால், சென்னையில் மட்டும் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சென்னையை நோக்கிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்துறை தமிழகத்தில் வளர்ந்தாலும், குறிப்பிட்ட ஒரு பகுதியில் வளர்வது புவியியல் ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும். கிராமங்கள் அழியும் பேராபத்து ஏற்படும். மற்ற நகரங்களின் வளர்ச்சி குறையும். இது முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.
இந்த நிலையில், பெங்களூருவை புரட்டி போட்டு வரும் வெள்ளம் தமிழக தொழில் வாய்ப்புக்கான சூழலை அதிகரித்துள்ளது. பெங்களூருவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரம். சென்னையை ஒப்பிடும் போது, பெங்களூருவில் தொழில் நிறுவனங்கள் அதிகம். ஆனால், தற்போது பெங்களூருவை புரட்டி போட்டு வரும் பெருவள்ளம் காரணமாக இனிமேல் அங்கு தொழில்தொடங்கவுள்ள நிறுவனங்கள் அல்லது அங்கிருக்கும் நிறுவனங்கள் கூட வேறு இடங்களை பற்றி சிந்திக்கத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை தமிழக அரசு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
பெரு நிறுவனங்கள் பெங்களூருவை தேர்வு செய்வதற்கான காரணமாக அதன் தட்பவெட்ப நிலை கூட இருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறார்கள். எனவே, பெங்களூருவை ஒட்டி இருக்கும் தமிழகத்தின் ஓசூரில் பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர ஸ்டாலின் தலைமையிலான
திமுக
அரசு முயற்சிகளை மேற்கொண்டால், சென்னை தவிர அந்த நகரமும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அடையும். இதன் மூலம் அண்டை மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்படுகிறது. ஏற்கனவே ஓசூரில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கிறது. உதான் திட்டத்தின் கீழ் அங்கு விமான நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சாத்தியக்கூறுகளை பயன்படுத்தி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மிகப்பெரிய ஐ.டி., கம்பெனிகள் உள்ளிட்ட கூடுதல் தொழில் நிறுவனங்களை அங்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
பெங்களூருவை ஓரங்கட்டி விட்டு, ஓசூரை தொழில் நகரமாக்கும் முயற்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கர்நாடக அரசியல்வாதிகளின் லாபிகளால் அந்த முயற்சிகள் நீர்த்துப்போகின. எனவே, தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி ஓசூர் மட்டுமல்லாமல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிகளை மேம்படுத்துவதன் மூலம், எல்லையோர மாவட்ட மக்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வேலைக்கு செல்லும் நிலை தவிர்க்கப்படுவதுடன், சென்னையை தவிர்த்து தமிழகத்தில் மற்ற நகரங்களிலும் தொழில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொழில் வளர்ச்சியை தாண்டி இது திமுகவின் அரசியலுக்கும் கைகொடுக்க வாய்ப்புள்ளது. சென்னை திமுகவின் கோட்டையாக இருக்கிறது. அதற்கு காரணம், கட்டமைப்பை மேம்படுத்தி தொழில் வளர்ச்சியை சென்னையில் அதிகரித்ததில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு முக்கிய பங்குண்டு. ஏராளமான தொழிற்சாலைகளை கலைஞர் கருணாநிதி சென்னைக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகின. சென்னையில் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்க அதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. திமுகவை பொறுத்தவரை கொங்கு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் பெரும் சவாலாகவே உள்ளது. கலைஞர் கருணாநிதி கூட பல சமயங்களில் இது தொடர்பான தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். ஸ்டாலினும் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். ஆனால், அது கைகூடுவதற்கான வாய்ப்பு தற்போது திமுகவுக்கு கிடைத்துள்ளது. தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் திமுகவின் வாக்கு வங்கி தானாகவே அங்கு பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. வரலாறு அதற்கான வாய்ப்பை ஸ்டாலினுக்கு கொடுத்துள்ளது. அதனை அவர் உபயோகப்படுத்திக் கொள்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.