பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அண்மைக்காலமாகவே வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து இருந்து வந்ததால், பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட அவரை, புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். வழக்கமாக பக்கிங்ஹாம் அரண்மணையில், புதிய பிரதமரை சந்திக்கும் ராணி, இம்முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார்.

இந்த நிலையில், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர கண்காணிப்பில் வைக்கும்படி அறிவுறுத்தினர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இன்று மதியம் உயிரிழந்து விட்டதாக பக்கிங்ஹம் அரண்மனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவரது உடல் நாளை லண்டனுக்கு கொண்டு வரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வரும் செய்தியால் நாடு முழுவதும் ஆழ்ந்த கவலையில் உள்ளது. எனது எண்ணங்கள், நாட்டு மக்களின் எண்ணங்கள் அனைத்தும் அரசு குடும்பத்துடன் துணை நிற்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, உலக தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவருடனான சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். அவரை எப்போதும் நான் போற்றுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி என்ற பெருமையை பெற்ற ராணி இரண்டாம் எலிசபெத், 1952ஆம் ஆண்டில் அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் பிரிட்டன் ராணியாக முடி சூடினார். 1947ஆம் ஆண்டில் எடின்பெர்க் டியூக் பிலிப்பை திருமணம் முடித்தார். அவரது கணவர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத காலமானார். இந்த தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். ராணி எலிசபெத் காலமானதால், அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ், புதிய அரசராகவும் காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்தால் அடுத்த நடக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும். அதன்படி, ராணி உயிரிழந்தால் அதனை ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்று குறிப்பிடுவர். இந்த குறியீட்டின்படி, முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். பின்னர், ராணியின் தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் தொலைப்பேசி இணைப்பில் பிரிட்டன் பிரதமரைத் தொடர்பு கொண்டு, ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்’ என்ற குறியீட்டை தெரிவிப்பார். தொடர்ந்து இங்கிலாந்து ராணி உயிரிழந்து விட்டத்தை பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். பிரிட்டன் அரசு ஊடகமான பிபிசி டிவி மற்றும் ரேடியோ மூலம் அவரது மரணம் குறித்து செய்தி பொதுமக்களிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கும் அவரது மரணம் தெரிவிக்கப்படும். பிரிட்டன் முழுவதும் 12 நாட்களுக்கு துக்கம் அணுசரிக்கப்படும்.

ஆனால், இங்கிலாந்து ராணி எலிசபெத் ஸ்காட்லாந்தில் உயிரிழந்துள்ளதால், ஆப்பரேஷன் யுனிகார்ன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். யுனிகார்ன் என்பது ஸ்காட்லாந்தின் தேசிய விலங்காகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.