புதுடெல்லி: தெருநாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு சோறு போடுபவர்களே பொறுப்பாவார்கள். தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும், சோறு போடுபவர்களே ஏற்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து விட்டதாகவும், அதை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் வி.கே.பிஜூ உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ‘கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்கடியால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உச்சகட்டமாக சமீபத்தில் 12 வயது சிறுவன் நாய்கடியால் இறந்தார். கடந்த 2015ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில், உள்ளாட்சி சட்டங்கள்படி தெருநாய்கள் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெரு நாய்களால் ஆபத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: பொதுவாக தெரு நாய்களுக்கு உணவு தருபவர்களால் அவற்றை எளிதாக அடையாளம் காண முடியும். எனவே, அந்த தெரு நாய்கள் யாரையாவது கடித்தால், அதற்கு உணவு தருபவர்களே பொறுப்பாவார்கள். அவர்கள்தான் தெருநாய்க்கு தடுப்பூசி செலுத்தும் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.
நாய்களுக்கு உணவு கிடைக்காவிட்டாலோ அல்லது ஏதாவது தொற்று பாதிப்பு ஏற்பட்டாலோ அவை கொடூரமாக மாறி விடுகின்றன. எனவே, தெருநாய்கள் குறித்த கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம். தெருநாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான், பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் தடுக்க வேண்டும். அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ரேபிஸ் வைரஸ் போன்ற தொற்றால் பாதிக்கப்பட்ட தெருநாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புதுறை தனியாக பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கில் விலங்குகள் நல வாரியத்தினர், அவர்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தபின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.